வியாழன், 10 டிசம்பர், 2020

அகோரிகள் பாவம்!


ஸஈக்.. பாலகனே...!

​அகோரிகள் எரித்தது

உன் உடம்பை அல்ல...

அவர்களையேதான்

அவர்கள் எரித்துக்கொண்டார்கள்...

விரலைக்கூடச்சூப்பி

உருசிபார்க்காத உன்னை

உலகத்தை நாற்புறமும்

திரும்பிப்பார்க்காத உன்னை

அக்கினியோடு கலந்தார்கள்

இருபதில் வெற்றிகண்டோம்

என்ற ஆணவம் தலைக்கேற...

 

உன்பெற்றோருக்கு இல்லாத

தீநோய் உனக்கானது எப்படியோ?

கருவறுப்பதற்காகவே

அகோரிகள் வலம் வருகிறார்கள்

உன் பெருமூச்சின் அகோரம் அறியாது!

 

இருபது நாட்கள் மட்டுமே

இம்சைதரும் இந்நாட்டில்

மூச்சுவிட்டாய்...

கேடுகெட்டோரின்

அரக்க குணங்களை மேலும் காணாது

நீ சென்றாயே...

 

எங்கள் உரிமைகள் கேள்விக்குறியாக

எங்கள் வட்டிலப்பக் கோப்பைகளில்

மலம் கழித்துவிட்டார்கள்....

எங்கள் உதவிகளைப் பெற்றுக்கொண்டு

எங்களை நட்டாற்றில் விட்டார்கள்​

கேடுகெட்டவர்கள்...!

அவர்களுள் விரல்விட்டெண்ணக்கூடிய

நல்லவர்களும் இல்லாமலில்லை மகனே!

 

எங்கள் ஜனாஸாக்களை

தொழுகைகூட நடாத்தவிடாமல்

எரிக்கிறார்கள் மகனே.. எரிக்கிறார்கள்...!

எங்கள் உம்மத்துக்களின் இதயங்கள்

சல்லடையாக மகனே... சல்லடையாக...!

 

சாஈக்... பாலகனே!

உன்னை எரித்து

எங்களுக்குப் பாடம் புகட்டுகிறார்கள்

நம்றூதுகள்...!

அல்லாஹ்வின் பிடிபற்றி அறியாது

அவர்களின் ஆட்டம் எல்லாம்

ஆட்டம் காணும் நாழிகைகள் ​

வெகுதூரத்தில் இல்லை...

அபாபீல்களின் சுடுகற்களால்

வைக்கோலாய்ச் சுட்டெரிக்கப்படும்

நாழிகைகள் வெகுதூரத்தில் இல்லை...

 

ஓடும் இரத்த்த்தின் உண்மையை

வெளிக்காட்டிவிட்டாரகள்

உன்னை எரித்து....!

நாதாரிகளின் நாசம் உறுதியே...!

என்றோ தீட்டிய அவர்களின் திட்டம்

எங்கள் பதுவாக்களுக்காக வலம் வருகிறது

 

அவர்களின் திமிறு

அவர்களுக்கு எதிராகவே

எழும் என்பதை அவர்கள் அறியாதவர்களாய்...

மகனே உன்  உடலெரிப்பு

அவர்களில் பலருக்கு ஹிதாயத்தாகலாம்!

 

உனக்கு சுவனம்தான் மகனே...

உறுதியாக இறைமறுப்பாளனுக்கு

கொழுந்துவிட்டெரியும்​​

கொடு நரகமேதான்...

ஆழ்மனம் வேதனையில் மகனே!

அழிவுக்கு அவர்களே

அத்திவாரமிட்டுவிட்டார்கள் மகனே!

 

- கலைமகன் பைரூஸ்

மதுராப்புர, வெலிகமகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக