ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

உயர்தரக் கல்வித்துறை மற்றும் உயர்தர பரீட்சையோடு தொடர்பான உயரதிகாரிகளின் கவனத்திற்கு

ஆசிரியர் ஒருவரின் ஆதங்கம்!

உயர்தர பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சை திணைக்களம் என்பன எடுக்கும் எந்தவொரு முடிவும் எந்தவொரு மாணவனையும் பாதிக்கலாகாது.
இம்முறை உயர்தர பரீட்சை தொடர்பாக பல தரப்பினரும் பல்வேறு வகையான கருத்துக்களை கூறி வருகிறார்கள். கல்வி

அமைச்சு, பரீட்சை திணைக்களம் என்பன இம்முறை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கடந்த வருட ஏப்ரல் தாக்குல் மற்றும் தற்போதைய கொரோனா நோய் பரவல் காரணங்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கொள்கை அளவில் பகிரங்கமாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது மனதிற்கு சற்று ஆறுதல் தரக்கூடிய விடயம். 

எனினும் இது தொடர்பாக அறிக்கை விட்டிருக்கும் கல்வி அமைச்சர் மற்றும் பரீட்சை ஆணையாளர் ஆகியோர் ஏற்கனவே திட்டமிட்டபடி பரீட்சையை உரிய திகதிகளிலே நடாத்த எதிர்பார்ப்பதாகவும் இம்முறை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் பாடப்பரப்பில் இறுதியாக உள்ள சில அலகுகளை நீக்கியாவது வினாத்தாள்களை தயாரிக்க ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேற்படி இந்த ஆலோசனையை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயமாகும். அதன்படி வினாத்தாள்களை தயாரித்தாலும் மாணவர்களின் ஒரு சாரார் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. அதாவது உயர்தர பரீட்சையில் 1ம், 2ம், 3ம் தடவைகளில் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் என காணப்படுவார்கள். 
எனவே 2ம், 3ம் தடவைகளில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களைவிட ஒப்பீட்டளவில் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1ம் தடவை தோற்றுபவர்களாவர். எனவே இதனை இழிவளவாக்க 1ம் தடவை மாணவர்களுக்கு தனியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட வேண்டும். இது நடைமுறை சாத்தியமற்றது. 
ஏனெனில் அவ்வாறு வேறு வேறான வினாத்தாள்களை தயாரித்தால் வேறு வேறான மாவட்ட நிலை, தேசிய நிலை, Z-புள்ளி என்பனவும் வெளியிட நேரிடும். அத்துடன் பல்கலைக்கழக இட ஒதுக்கீடுகளிலும் பாரிய சிக்கல் தோன்ற வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கடந்த வருடம் பரீட்சை புதிய, பழைய பாடத்திட்டம் என இரண்டு முறைகளில் நடாத்தப்பட்டு இரண்டிற்கு வெவ்வேறான மாவட்ட நிலைகள் வெளியிடப்பட்டு பல்கலைக்கழக இட ஒதுக்கீடு வீதத்தில் பாரிய வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது. 
அத்துடன் இதனால் பாதிப்படைய இருக்கும் ஒரு சாரார் நீதிமன்றத்தை நாடவும் எதிர்பார்த்துதான் இருக்கிறார்கள். புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்கும் போதுதான் இப்பிரச்சினைகள் எல்லாம் வெளிப்படும். 
கடந்த வருடம் உயிரியல் பிரிவில் புதிய பாடத்திட்டத்தில் தோற்றிய மாணவியொருவர் 3A சித்திகளுடன் புதிய பாடத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் மாவட்ட நிலை 164 எடுத்தும் மருத்துவ துறையில் பல்கலைக் கழக வாய்ப்பை இழக்கப் போகிறார்.
கடந்த வருடத்தை போன்று இவ்வருடமும் புதிய, பழைய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படவுள்ளன. ஏற்கனவே நான் குறிப்பிட்டது போன்று 1ம் தடவை தோற்றுபவர்களுக்கு தனியான வினாத்தாள் நடாத்தப்பட்டால் 3 வகையான பரீட்சாத்திகள், மூன்று வெவ்வேறான மாவட்ட நிலை பெறப்படும். இது பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே உரிய உயர் அதிகாரிகள் மேலிடத்திற்கு இது தொடர்பான விடயங்களை எத்தி வைக்குமாறு வேண்டுகிறேன்.
தற்போதைய நாட்டு நிலைமையானது இதற்கு முன்னர் தோன்றிதாத வித்தியாசமான ஓர் நிலைமை என்பதையும் முழு நாடும் பழைய இயல்பு நிலையை பெற இன்னும் எத்தனை நாட்கள் எடுக்கும் என்பதை கூற முடியாது என்பதாலும் மாணவர்கள் பாதிப்படைவதை குறைக்க சிறந்த வழி பரீட்சையை சில காலம் பிற் போடுவதுதான் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
உயர்தர பரீட்சை என்பது சாதாரன பரீட்சை போல அல்லாது மிகவும் போட்டித் தன்மையுள்ள பரீட்சை என்பதை அனைத்து உயர் அதிகாரிகளும் கவனத்திற் கொள்ளவும்.

-மொஹமட் மிஷ்ஃபாக் (ஆசிரியர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக