சனி, 21 மார்ச், 2020

சுவிஸ் மதகுருவின் லீலைகள் அம்பலம்!

யாழ்ப்பாணத்திற்கு கொரோனா வைரசை ஏந்திவந்து பிரச்சாரம் என்ற பேரில் ஒவ்வொருவரிடமும் பணம் கரந்து சென்ற சுவிட்சர்லாந்தில் வாழும் கிறிஸ்தவ போதகர் மற்றும் அவருடன் கலந்துகொண்டோர் பற்றி படங்கள் இப்போது எங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த மதபோதகரின் பெயர் போல் சட்குணராசா எனவும், யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்துள்ள பிடெல்பியா தேவாலயத்தில் அவர்

ஆராதனைநடாத்தினார் எனவும் தெரியவருவதுடன், குறித்த தேவாராதனையில் 500 பேரளவில் கலந்துகொண்டதாகத் தெரிகின்றது. அதற்கான ஆதாரங்களும் எங்களுக்குக் கிடைத்துள்ளன. வந்திருந்தவர்களில் பெரும்பாலானோரை அவர் முத்தமிட்டிருக்கின்றார். தற்போது பொலிஸார் ஆராதனைக்குச் சமுகமளித்தோர் வலை வீசித் தேடிக்கொண்டிருக்கின்றனர். பல இளம் யுவதிகள் தலைமறைவாகியுள்ளனர்.

சட்குணராசா தான் ஆரம்பத்தில் நாஸ்திகனாக இருந்ததாகவும், பின்னர் கடவுள் கடாட்சத்தால் தான் கிறிஸ்தவ சமயத்தில் இணைந்ததாகவும் தன் வாழ்நாளை கடவுளுக்காகத் தியாகம் செய்வதாகவும் பல நிகழ்வுகளில் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் ஏமாற்றுத்தனத்தை, பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எட்டப்பர் தனத்தை சுவிஸ் தொலைக்காட்சியொன்று புட்டுப்புட்டாய் ஒலி-ஔிபரப்பியுள்ளது. அந்தத் தொலைக்காட்சியில் வௌிவந்த விடயங்கள் பற்றி தமிழ் இணையத்தளம் ஒன்றும் செய்தி வௌியிட்டுள்ளது.

சுவிஸில் தேவாராதனை என்ற பேரில் விண்ணப்பப் படிவங்களை அச்சிட்டு வௌியிட்டு, சுவிஸ் மக்களிடம் சந்தாப்பணம் அறவிடுவதாகவும், குறித்த நேரத்தில் சந்தாப்பணம் செலுத்தாவர்களை தேவனின் கடுங்கோபத்திற்கு ஆளாக வேண்டி ஏற்படும் எனவும் பயமுறுத்தி, அவர்களைத் தன்கால்களில் விழ வைக்கும் கைங்கரியத்தில் சட்குணராசா சாமர்த்தியனாக இருப்பதாகவும், பெரும்பாலும் தேவ ஆசி என்று அவரால் பொய்யே கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், இவர் போன்றவர்களால் கிறிஸ்தவ சமயத்திற்கே இழுக்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமுழுக்கு என்ற பேரில் நீரில் அமிழ்த்தி கர்த்தரின் பேரால் மக்களுக்குப் புதிய பெயர் சூட்டவும் செய்கிறார். அந்தக் காணொளியை இந்தப் பதிவின் கீழ் பார்க்கலாம்.

எதுஎவ்வாறாயினும் சட்குணராசாவின் ஏமாற்றுத்தனத்திற்கு யாழ் மக்களிற் சிலரும் பலிக்கடாக்களாக மாறியுள்ளார்கள். அதன் பெறுபேறாகவே நாளுக்கு நாள் யாழில் கொரோனா தாக்கத்திற்கு மக்கள் ஆளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-கலைமகன் பைரூஸ்


(நன்றி - இலங்கைநெற்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக