வியாழன், 15 ஆகஸ்ட், 2019

டொக்டர் ஷாபிக்கு எதிரானவர்களுக்கு அச்சுறுத்தல்...- பொலிஸ் பாதுகாப்புக் கோருகிறார் குருணாகலை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் !

குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தயர் ஷாபி ஷஹாப்தீன் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், தனக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குருணாகலை போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கந்தன்கமுவ நேற்று (14) குருணாகலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என சிங்களச் செய்திப் பத்திரிகையான 'திவயின'வில் செய்தி பிரசுரமாயுள்ளது.

டொக்டர் ஷாபி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ. எஸ். திஸேராவின் குடும்ப விபரங்களைத் தெரிந்து கொண்டு, அது தொடர்பில் தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு திஸேராவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


அதுதொடர்பில் தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து தனகு வீட்டுப் பக்கமாக சந்தேகத்திற்குரிய ஒருசிலர் நடமாடுவதாகவும், சந்தேகத்திற்கிடமான முறையில் சில மோட்டார் சைக்கிள்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருவதாகவும், பிரதிப் பணிப்பாளர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதனால் எந்தவித பாதிப்புக்களுமின்றி தனது கடமையைச் செவ்வனே செய்வதற்கு பாெலிஸ் பாதுகாப்பினைப் பெற்றுத் தருமாறும் குருணாகலை வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வைத்தியருடன் வழக்கறிஞர்களான இந்திரசிரி சேனாரத்ன, சமன் திசாநாயக்க, நிலுக்ஷி உயன்வத்த ஆகியோரும் முறைப்பாட்டுக்காக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக