நாட்டில் சமாதானத்தை சீர்குலைப்பவர்களுக்கும், அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கும் எதிராக கடுமையான சட்டத்தை நிறைவேற்றுவதற்கு, பூரண அதிகாரம் பாதுகாப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையாகச் செயற்படுவதற்கும் பாதுகாப்புப் பிரிவினர்
அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டே பிரதமர் இந்த விஷேட அறிவித்தலைத்  தெரிவித்தார்.

அந்த விஷேட அறிவித்தலாவது,
 
சர்வதேச பயங்கரவாதத்தின் பெறுபேறாகவே உயிர்த்த ஞாயிறன்று மனிதாபிமானமற்ற தாக்குதல் நடாத்தப்பட்டது. அது தொடர்பில் எங்கள் பாதுகாப்புப் படையினர் மிகவும் சிறப்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனுடன் தொடர்புடைய பலரை சட்டத்தின் கைகளுக்குள் கொண்டுவர எங்களால் முடிந்துள்ளது. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவினருக்கும் இயலுமாக இருந்தது.

ஆயினும், நாட்டில் நீதி சீர்குலைந்து, இனவாதப் பிரச்சினை ஏற்பட்டால் நாடு சங்கடத்திற்குள்ளாகும். இந்த அசமந்த செயற்பாட்டினால் பாதுகாப்புப் பிரிவினர் தங்களது விசாரணைகளைச் மிகச் சிறப்பாக நடாத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அங்குமிங்குமாக பிரச்சினைகள் முளைத்தெழச் செய்வதன் இரகசியம் என்னவென்றால், நாட்டில் வெசாக் பண்டிகையையும் சீர்குலைப்பதே.

வடமேல் மாகாணத்தின் பல இடங்களில் இந்தக் குழுக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு முனைந்தது. உடைமைகளுக்குச் சேதங்களை விளைவித்தார்கள். தற்போது பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் நிலைமையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இன்னும் இன்னும் அங்குமிங்குமாக பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு இந்தக் குழுக்கள் முனைந்து வருகின்றன. 

பொலிஸாரையும், பாதுகாப்புப் படையினரையும் அலைக்கழிப்பதே அவர்களது நோக்கமாகவும் உள்ளது. மேலும் மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைப்பதும், நாட்டை சங்கடத்திற்குள்ளாகுவதுமே எண்ணப்பாடுகளாக உள்ளன. 

இதனால் நாடெங்கிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

நாட்டில் சமாதானத்தை சீர்குலைப்பவர்களுக்கும், அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டங்களை மீறுவோருக்கும் எதிராக கடுமையாகச் செயற்படுவதற்கு முழுமையான அதிகாரம் நான் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கியுள்ளேன். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டம் பிரயோகிக்கப்படும்.

அதனால் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கு பொலிஸாருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு நான் கேட்டுக்  கொள்கின்றேன். 
 
நன்றி - லங்காதீப (அஞ்சுல மஹீக்க வீரரத்ன)
தமிழில் - கலைமகன் பைரூஸ்