திங்கள், 1 ஏப்ரல், 2019

அம்ஹர் மௌலவியினால் மெய் சிலிர்த்துப்போன சிங்களவர்களின் அசத்தல் கருத்துக்கள்

- Rinoosa Abdhul Baary - 

அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட குறித்த நேர்காணலுக்கு வழங்கப்பட்டுள்ள பின்னூட்டங்கள் சான்று பகர்கின்றன.

பல பெரும்பான்மை சகோதரர்களின் பெயர்களைத் தாங்கியுள்ள பின்னூட்டங்கள் நேர்மறைக் கருத்துக்களையும் அவர்களின் உள்ளக்கிடக்கைகளையும் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.

பெரும்பான்மை சகோதரர்களின் பெயர்களைத் தாங்கியுள்ள நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களிலிருந்து ஒருசிலவற்றை மாத்திரம் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்த்து இங்கே பதிவிடுகிறேன்.

இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் பல சிங்கள மக்களிடம் உள்ள சந்தேகங்கள் வெறும் ஒன்றரை மணிநேர நிகழ்ச்சியினூடாக ஓரளவுக்கேனும் களையப்பட்டுள்ளமை இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரும் வெற்றியாகும்.

அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் இந்தத் தூய பணி இன்னும் தொடரவேண்டும்.

1. Ruwan Bandara: சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பாராது இதயத்தினூடாக அவர் சொல்வதைக் கேட்டுப்பாருங்கள். நாம் எங்கு பிழைவிட்டிருக்கிறோம் என்பதை இப்போதேனும் புரிந்துகொண்டு எமது பிள்ளைகளுக்காவது மனிதம் நிறைந்த ஒரு நாட்டை உருவாக்குவோம்!

2. Arunya Nirmaliee: இன்றிலிருந்து எனக்கு முஸ்லிம் பெண்மணிகள் புர்கா அணித்திருக்கின்றனர் என்பதால் கோபமோ வெறுப்போ ஏற்படாது. நாம் அவர்களை மதிக்க வேண்டும். இலங்கையில் அரைகுறை ஆடையணிந்து திரிகின்ற சகோதரிகளுக்கு சிறந்ததொரு செய்தி வழங்கப்பட்டுள்ளது.

3. Krishan Kaushalya: (இந்த நிகழ்ச்சி முஸ்லிம்களும் கேட்கும் விதமாக தமிழ்மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும். அவர்களும் இதனைக் கட்டாயம் கேட்க வேண்டும்). இந்த மௌலவி சிறந்த அறிவைக் கொண்டுள்ளார். சிறந்ததொரு மனிதர். எல்லாவற்றையும் நேர்மையாக வெளிப்படுத்துகின்றார். இவரைப் போன்று எல்லா முஸ்லிம் சகோதரர்களும் நினைப்பார்களேயானால் இந்த நாடு எவ்வளவு அழகானதாக இருக்கும். சத்துர நிகழ்ச்சியை நகர்த்திச்செல்கின்ற விதம் பாராட்டத்தக்கது. இந்த முஸ்லிம் சகோதரரிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

4. Sulari Hansika: பெறுமதியான ஒரு கலந்துரையாடல். கற்றுத்தேர்ந்த மக்கள் ஒரு பெறுமதியான புத்தகத்தைப் போன்றவர்கள். எமக்கு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன.

5. Dimuth Aladeniya: இவர் சிங்கள மொழியைப் பிரயோகிக்கின்ற விதத்தைப் பார்க்கின்றபோது மெய்சிலிர்த்தது எனக்குமட்டும்தானா? சிங்களவர்களான எங்களின் வரலாற்றிலிருந்தே உதாரணங்களை எடுத்து, கத்தியால் குத்துவத்தைப் போன்று எங்களையே அதுபற்றிக் கேள்வி கேட்கின்றபோது இடிவிழுந்ததுபோல் வெட்கமும் கவலையும் ஏற்பட்டது எனக்குமட்டும்தானா?

6. Hashini Himaya: மாட்டிறைச்சி சாப்பிடுவது பற்றிச் சொன்ன விடயமென்றால் சூப்பர். மக்கள் சரியான சுயநலவாதிகள். சிலவேளை முஸ்லிம் சமயத்தவர்கள், "கோழி இறைச்சி சாப்பிட வேண்டாம்.... கோழி நாம் நேசிக்கின்ற ஓர் உயிரினம். எமது மார்க்கத்தின்படி கோழியை தெய்வத்தன்மையுடன் நோக்குகின்றோம். அதனால் கோழிகளைக் கொல்ல வேண்டாம். கோழிக்கடைகளை மூடிவிடுங்கள்" என்று சொன்னால் அவர்களின் மார்க்கத்திற்கு மதிப்பளித்து சிங்கள மக்கள் அவ்வாறு செய்வார்களா? ஒருபோதும் இல்லை. அந்த முஸ்லிம் மக்களுக்கு மாடு என்பது கோழி, மீன், ஆடு போன்றதோர் உயிரினம்தான். எமது மக்கள் உடும்பு, முள்ளம்பன்றி, மான் போன்றவற்றைச் சாப்பிடுவது பற்றி ஒரு கதையும் இல்லை. மாட்டிறைச்சி சாப்பிடவேண்டாம் எனச் சொல்கின்ற பலர் வேட்டையாடிய இறைச்சிகளைச் சாப்பிடுவதற்கு மிகவும் விருப்பப்படுகின்றனர். மாட்டைக் கொல்லவேண்டாம்.... யானையைக் கொல்லவேண்டாம் என வெட்கமின்றிக் கதைக்கின்றனர். அப்படியல்ல. எந்தவோர் உயிரினத்தையும் கொல்லவேண்டாம் என்றே சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். சிங்கள, கத்தோலிக்க மக்களிலும் முஸ்லிம்களைப் போன்றே ஜாதி, மதங்களுக்காக சண்டை பிடிப்பவர்கள் இருக்கின்றனர். பிள்ளை பெறுவது பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், எமது பாட்டியின் அம்மாவின் காலத்தில் எல்லா வீடுகளிலும்போல 12 பிள்ளைகள் என்ற அளவுக்குப் பெற்றுக்கொண்டனர். ஆனால் இப்போதுள்ளவர்கள் பொருளாதாரம், பாலியல் சார்ந்த வெட்கம் போன்ற காரணங்களினால் அந்த நிலையைக் காலத்துக்கேற்ப மாற்றிக்கொண்டனர். எங்களுடைய பௌத்தமும் "பிறப்பென்பது கவலைகரமானது" என்றுதான் எமக்குக் கற்றுத்தருகின்றது. அதுதான் இதற்கான பிரதான காரணம். ஆனால், முஸ்லிம்களின் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களை மிக அரிதாகவே முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் சேர்க்கின்றனர்.... வீதிகளில் அநாதரவாக விடுகின்றனர். ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மனிதர்கள் பெறுமதியானவர்கள்.

(JM)

---------------------------------------------------------------
E-mail: ceyloncnews@gmail.com
---------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக