திங்கள், 25 மார்ச், 2019

வில்பத்து மரங்களை வெட்டியது யார்?

வில்பத்து பிரதேசத்தில் மரங்களை வெட்டியது அரசியல் அதிகாரமா ? படை அதிகாரமா ? சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உண்டு.

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைகுட்பட்ட கிராமங்கள் 2008 இல் இரானுவத்தினர்களால் கைப்பேற்றப்பட்டதன் பின்புதான் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அப்பிரதேசங்களில் புலிகளால் நடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வில்பத்து வனாந்திரத்துக்கு அருகாமையில் இந்த கிராமங்கள் இருந்ததனால், மேலிருந்து பார்க்கின்றபோது, அடர்ந்த காடுகளாகவும், வில்பத்துக்குரிய பிரதேசங்கள் போன்றே காட்சியளித்தது. 

மிகவும் விலையுயர்ந்த இந்த மரங்களெல்லாம் 2009 தொடக்கம் 2011 வரைக்குமான காலப்பகுதிகளில் வியாபாரத்துக்காக வெட்டப்பட்டு அவைகள் வெளி இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

2௦15 க்கு பின்பு அங்கு எந்தவொரு மரங்களும் வெட்டப்படவில்லை என்று அண்மையில் ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வாறாயின் 2௦15 க்கு முன்பு அங்கு மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றது என்பது அதன் பொருளாகும்.   

அவ்வாறு பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதனால் வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டதாக செய்மதி படங்களை ஆதாரமகாக்கொண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டதனால் அவைகள் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்தன.

2௦1௦ ஆம் ஆண்டுக்கு பின்பு மரங்கள் வெட்டப்படுவது ஒரு சர்ச்சைக்குரிய பேசுபொருளாக அரசியல் மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றதுடன், வில்பத்து காடுகள் அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

மிகவும் உயர்ந்து வளர்ந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டபின்பு அதன் தடயங்கள் மறைவதென்றால் அதற்கு சமனாக புதிய மரங்கள் முளைக்க வேண்டும். அவ்வாறு முளைப்பதற்கு பல வருடங்கள் தேவைப்படும்.

ஆனால் இன்னும் அதன் தடயங்கள் மறையாத நிலையில் உள்ளதனால் தொடர்ந்தும் காடுகள் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

வெட்டப்பட்ட மரங்களெல்லாம் செயற்கையாக நடப்பட்டு பராமரிக்கப்பட்ட முசலி பிரதேச சபைக்கு உள்பட்ட மரங்களே தவிர, இயற்கையாக முளைத்த வில்பத்து காடுகள் அல்ல. இதில் சந்தன மரங்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.     

இவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுவதனை கட்டுப்படுத்தும்பொருட்டு முசலி பிரதேச சபைக்கு உட்பட்டதும், வில்பத்து தேசிய சரனாலயத்துக்கு அண்மித்த பிரதேசங்களான மரிச்சிக்கட்டி, பாலைக்குழி ஆகிய முஸ்லிம் கிராமங்களின் சில பிரதேசங்கள் வில்பத்து தேசிய சரனாலயங்களுக்கு சொந்தமானது என்று 2012 இல் அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த பிரகடனத்தினால் முசலி பிரதேசசபைக்கு உட்பட்ட பல பிரதேசங்கள் வில்பத்துவுடன் இணைக்கப்பட்டது.

அப்போது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமாக இருந்ததனால் அவரது ஆட்சியில் அதிகாரத்தில் இருந்த குறித்த பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதிகளால் இதனை தடுக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை.

ஆனாலும் அவ்வாறு மரங்கள் வெட்டப்படாமல் இருந்திருந்தால் முசலி பிரதேசத்தின் நிலங்கள் வில்பத்துவுடன் இணைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

வெட்டப்பட்ட மரங்கலானது ஒன்று இரண்டு அல்ல. மாறாக அவைகள் பல்லாயிரக்கணக்கானவை. அவ்வறையின் இந்த மரங்களை  வெட்டியது யார் ?

இவ்வளவு மரங்களை சாதாரன தனி நபர்களினால் வெட்டுவது என்பது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும். அப்பிரதேசங்களில் இரண்டு அதிகாரங்கள் மட்டுமே இருந்தது. ஒன்று அரசியல் அதிகாரம். மற்றையது படையினர்களின் அதிகாரம்.

படையினர்களின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது. குறித்த பிரதேசத்தோடு அவர்களது அதிகார எல்லை முடங்கிவிடும். இவ்வாறான மரங்களை வெளிநாடுகளுக்கோ அல்லது தென் இலங்கைக்கோ படையினர்களினால் கொண்டுசெல்ல முடியாது.

எனவேதான் இந்த மரங்களை வெட்டுவதற்கும், தூர இடங்களுக்கு கொண்டுசென்று அதனை சந்தைப்படுத்துவதற்கும் எந்த அதிகாரம் செயல்பட்டிருக்கும் என்று சிந்திப்பவர்களுக்கு மட்டுமே அத்தாட்சிகள் உண்டு. 

- சாய்ந்தமருது  முகம்மத் இக்பால் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக