வில்பத்து சரணாலயம் மற்றும் சுற்றுப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில்  தெற்கில் ஒரு சிலரினால்  பொய்ப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், இதன் மூலம் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிசெய்வதாகவும், அவ்வாறான
நடடிவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வடபகுதி பெளத்த மதகுருமார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வவுனியா ஸ்ரீபோதிதக்ஷணாராமவயில் சியம்பலாகஸ்வெவ விமலசார தேரரின் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தங்களது நோக்கங்களைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருசிலர் தெற்கில் வில்பத்துக் காடு பற்றியோ எதிர்காலம் பற்றியோ எவ்விதத் தேடலும் இன்றி, போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலம் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 
வில்பத்துக் காட்டுக்கு அருகாமையில் வாழ்ந்த மக்கள் 30 வருடங்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறினர். போரின் பின்னர் அவர்கள் தங்களது நிலங்களுக்கு மீண்டும் வரும்போது இந்தக் காடுகளை வெட்டிச் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்தது, தற்போது அவர்களின் தொகை அதிகரித்துள்ளது. அது சாதாரண நிகழ்வுதான். அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் இப்போது இங்கு நிலைகொள்ள வேண்டும். மீண்டும் குடியமர்த்தல்  அரச ஆதரவின்கீழ் நடைபெற்றுள்ளது. இந்த மக்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற்றும் நோக்குடனேயே அரசாங்கம் இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு முற்பட்டுள்ளது. 
இதுதொடர்பில் எல்லோரும் மனிதாபிமானம் என்ற முறையில் பார்த்து, பிரதேசங்களுக்கு வருகை தருகின்றவர்கள் படுகின்ற அவலங்களைக் கருத்திற்கொண்ட பின்னரே குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும். பிற சிந்தனைகளுடன் இதனைப் பார்ப்பார்களாக இருந்தால் இது, இனவாதம் என்ற முகத்துடன் பயணிக்கும். இதுதொடர்பில் நாட்டின் தலைவர்கள் கூடுதலான அவதானம் செலுத்த வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில்  வெலிஓய கிரிஇப்பன்வெவ விகாராதிபதி பொலன்னறுவே விஜிதாலங்கார தேரர் உட்பட பெளத்த மதகுருமார்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வீ. ஜயத்திலக உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

(கலை)