சனி, 11 ஆகஸ்ட், 2018

ஞானசாரர் உணர்ச்சிவசப்பட்டு விட்டார், நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை - சிங்கள ராவய

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டி கோரிக்கை விடுக்குமென, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மகால்கந்தே சுதத்த  தேரர் மகாநாயக்க தேரர்கள், இது குறித்த மனுவொன்றை, ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.   
கொழும்பு, இராஜகிரியவில் நேற்று (09) இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

மேலும் கருத்துரைத்த அவர், “நீதிமன்ற அவதூறு வழக்கில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் அனுபவிக்கும் வகையில் 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

சிங்கள பௌத்த மக்களுக்கு பாரிய அநீதியை இழைக்கும் ஒரு செயற்பாடாகவே இதனைக் கருதுகிறோம். நீதிமன்றத்தை அவர் அவமதித்ததாகக் கூறப்படும் சந்தர்ப்பத்தில் நானும் உடன் இருந்தேன்.   

ஊடகவியலாளலர் பிரகீத் எக்னெலிகொட வழக்குத் தொடர்பில் இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் அவ்வப்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இடப்படும் நிலையில். இது தொடர்பிலான வழக்கு விசாரணை ஒன்றுக்காக நானும் ஞானசார தேரரும் ஹோமகம நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தோம்.  

அதன்போது பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் கொலை செய்யப்பட்டிருப்பின் எலும்புகளோ அல்லது கொலைக்கு உபயோகிக்கப்பட்ட ஆயுதங்களோ கிடைக்கப்பெறவில்லை என நீதிபதி தெரிவித்திருந்தார்.  

இதனால், நாம் கைது செய்யப்பட்டிருந்த இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என்றே நினைத்தோம். ஆனால், அப்போது அது நடக்கவில்லை. மறுமுனையில், கைது செய்யப்பட்டவர்கள் கை விலங்குடனும் கண்ணீருடனும் காணப்பட்டனர்.  

இதனைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு நீதிபதியின் அனுமதியுடன்தான் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டிருந்தார். இதனை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நீதிபதியும், சட்டத்துக்கு இணங்கவே தாம் இந்த விடயத்தை அணுகுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.  

அதேநேரம், பிக்கு ஒருவர் என்ற காரணத்தால் தான் நீதிமன்றில் இவ்வாறு கருத்து வெளியிட அனுமதி வழங்கியதாகவும் நீதிபதி கூறியிருந்தார். இவ்வாறு இருக்கும்போது, அரச சட்டத்தரணிகள், ஞானசார தேரருக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.  

இதனால், மோசமான அரசாங்கத்தின் கீழ் செயற்படும் அதிகாரிகள் என ஞானசார தேரர் கூறினார். அதனால், அவர் சட்டத்தரணிகளையோ நீதிபதியையோ அல்லது நீதிமன்றையோ அவமரியாதை செய்யவே இல்லை” என்றார்.  

“இதற்காகவே ஞானசார தேரருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றுக்கு கல் அடித்த அமைச்சர் ரிஷாட் பதியூதீன் போன்றோர் எல்லாம் சுதந்திரமாகத் தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்தில் ஏன் இவ்வாறு பாகுபாடு காட்ட வேண்டும்? ஞானசார தேரருக்கு போன்று இந்த அமைச்சர்கள் விடயத்தில் சட்டம் செயற்படாமலிருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.  

எவ்வாறாயினும், ஞானசார தேரருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதுவே எமது கோரிக்கையாகும். இது குறித்த மனுவை மகாசங்கத்தினர், ஜனாதிபதியிடத்தில் கையளிக்கவுள்ளனர்” என்றார்.   

(JM)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக