புதன், 25 ஜூலை, 2018

நுஸ்ரான் பின்னூரி வைத்தியம்: விமர்சனங்கள் பற்றிய பார்வை

நுஸ்ரான் பின்னூரி வைத்தியம் தொடர்பில் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் குறித்து நேரடியாகவே நுஸ்ரான் மௌலவியை சந்தித்து அவருடைய வைத்திய முறைகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பான கருத்துக்களை அறிந்துகொண்டோம். அத்துடன், இவரது வைத்தியம் தொடர்பில் சமூகத்தின் ஒரு சில மருத்துவர்களிடமும் கருத்துக்களை பெற்றோம். அவற்றை நாம் இங்கு பிரசுரம் செய்கின்றோம். 
இவை மீள்பார்வையின் சொந்தக் கருத்துக்கள் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிட விரும்புகின்றோம்.

நான் மருத்துவத்துறை சார்ந்த ஒருவனல்ல. பாகிஸ்தான் பின்னூரியாவில் ஓதும் காலத்தில் கூட மருத்துவம் தொடர்பில் நான் எதனையும் அறிந்திருக்கவில்லை. 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவின் கேரளாவில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறச் சென்றபோது மலையாளி வயோதிபர் ஒருவரிடமும் பாஸ்கரின் ஆசான்களான கோஸ்மிரா, உமர் பாறூக் ஆகியோரிடமும் நிறைய விடயங்களை கற்றேன். நான் 2012 – 2015 வரை அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் மத்திய குழு உறுப்பினராகவும், கம்பஹா மாவட்ட செயலாளராகவும் இருந்தேன். 2015 டிசம்பர் 5ஆம் திகதி இந்தப் பதவிகளிலிருந்து விலகிக்கொண்டேன்.

பதிவு
ஆரம்பத்தில் வத்தளை, மாபோலையில் அமைந்துள்ள நூர் காஸிம் முஹம்மத் என்பவரின் வைத்தியசாலையில் மருத்துவச் செயற்பாடுகளை செய்தோம். கடந்த நோன்பு மாதத்தில் நாம் அவ்விடத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டோம். அதன் பின் 2 மாதங்கள் கழித்து கிராண்பாஸில் தற்போதைய இடத்தை வாங்கினோம். அன்று முதல் பதிவிற்கான நடவடிக்கைகளை மேற் கொள்கிறோம். கம்பனி பதிவினை நாம் செய்துள்ளோம். Raha Natural Herb (Pvt) Ltd. எனும் பெயரில் இந்நிறுவனம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் சட்டபூர்வமான முறையில் குப்த மருத்துவம் (ஓதிப்பார்த்தல்) செய்து வருகின்றேன்.
இந்தப் பதிவு மேற்கொள்ளப்பட்டு 9 மாதங்கள் ஆகின்றன. தலிபானிசத்தை வலுவூட்டுவதாக MOH இற்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டினை அடுத்து எமது வியாபார அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவ் அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமையினால் ஆயுர்வேத நிறுவனத்தின் அனுமதியும் தாமதாகிக்கொண்டுள்ளது.

நோய்கள் தொடர்பான கருத்துக்கள்

சிறுநீரக நோய்

ஆங்கில மருத்துவம் செய்து சிறுநீரக வியாதியில் கரைசேர்ந்த ஒருவரும் இலங்கையில் இல்லை. சிறுநீரகங்களை மாற்றுவதே அவர்களது இறுதிச் செயற்பாடு. நான் அறிந்த சட்டத்தரணி ஒருவர் 5 சிறுநீரகங்களை மாற்றியபடி வாழ்கின்றார். இப்படி வாழ்வதில் ஒரு சுகம் இருக்காது. மாற்றப்படுகின்ற சிறுநீரகங்களுக்கு 5 வருடங்களேனும் உத்தரவாதம் கொடுக்க மாட்டார்கள். சிறுநீரகங்களை மாற்றும் போது 40 வீதமே சாத்தியமாகும் எனக் கூறுவார்கள். இது சாத்தியமானாலும் அதற்கு கூட 5 வருடங்கள் உத்தரவாதமில்லை. சிறுநீரக செயலிழப்பு என்பது ஒரு தொற்று நோய். இரசாயன உணவுகளை உட்கொள்வதே அதற்கான காரணம். இதற்கான சிகிச்சைகள் என்ன என்பதை பார்ப்பதே இதன் அடிப்படை.

நீரிழிவு நோய்

நீரிழிவு ஒரு நோயல்ல. அது உடம்பிலுள்ள ஒரு பலவீனம். கணையத்தின் (Pancreas)  இயக்கம் குறைவதே இதற்கு காரணம். நீரிழிவுக்கு மருந்துக் குளிகை களை கொடுக்கும் போது உடம்பின் மற்ற உறுப்புக்களும் பலவீனமடையும்.

கொலஸ்ட்ரோல்

கொலஸ்ட்ரோல் நோயாளிகளை எம்மிடம் அனுப்புங்கள். ஆகக்குறைந்தது 10 நாளில் சிகிச்சை வழங்குவோம். ஆனால் 10 வருடங்கள் மருந்து குடிக்கும் கொலஸ்ட்ரோல் நோயாளிகள் உள்ளனர்.

Pressure

சந்தர்ப்பத்திற்கேற்ப உடம்பு வேகமான இயக்கத்தை தேவை காணும் நேரத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் குறைவது ஒரு நோய். High Pressure  என்பது ஒரு நோயல்ல. இரத்த ஓட்டம் அதிகமாவது என்பது அறிவு ரீதியாக பார்த்தால் கூட கூடாத செயலல்ல.

தடுப்பூசி (Vaccination)

தடுப்பூசி தொடர்பில் Vaccinologist களே பேச வேண்டும். தடுப்பூசித் துறையில் கலாநிதிப் பட்டம் முடித்த ஒருவரும் இலங்கையில் இல்லை. ஏறாவூரைச் சேர்ந்த சர்ஜூன் ஹாபிஸ் மாத்திரமே தடுப்பூசி தொடர்பில் கனடாவில் கலாநிதிக் கற்கையை தொடர்ந்துகொண்டுள்ளார். உலகில் தடுப்பூசித் துறையில் கலாநிதிப்பட்டம் முடித்தவர்களுள் ஒரு சாரார் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்றும் இன்னுமொரு சாரார் தடுப்பூசி கூடாதென்றும் கூறி வருகின்றனர். தடுப்பூசி கூடாதென்பதற்கு 150 மருத்துவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் என்னிடம் உள்ளன. இவர்கள் மேற்குலக வைத்தியர்கள். குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும்?

இன்று தடுப்பூசி ஏற்றப்படுகின்ற பெரும்பாலான குழந்தைகள் அடிக்கடி மருத்துவமனைகளையே நாடுகின்றனர். கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 28,000 – 36,000 இடைப்பட்ட பிள்ளைகள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இதுவல்லாத பல ஆயிரக்கணக்கான பிள்ளைகள் வெளி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். 3 மாத குழந்தைகளை தூக்கிக்கொண்டு வைத்தியர்களை நாடாத பெற்றோர்களே இல்லை. ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின் அது நோயாளிதான். எம்மை நாடி வந்த நூற்றுக் கணக்கான பிள்ளைகள் உள்ளார்கள் அவர்கள் ஒருவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படவில்லை. அல்லாஹ்வின் நாட்டத்தால் சுக தேகியாக உள்ளார்கள்.
தடுப்பூசியினால் நோய் ஏற்படும் என்பதாக உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகதார தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் ஒவ்வொரு தடுப்பூசிக்குமான பக்கவிளைவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. BCG  தடுப்பூசிக்கு மாத்திரம் 14 பக்கவிளைவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தடுப்பூசி மருந்தில் எத்தகைய உள்ளீடுகள் இடப்படுகின்றன என்பதை ஒருவரும் குறிப்பிடுவதில்லை.

பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் முறைப்பாடுகள்

எம்மிடம் சிகிச்சை பெற்று பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் அவர்களை எம்மிடம் அழைத்துவாருங்கள். நோயொன்றுக்கு சிகிச்சை செய்து அது 100% குணமாக வேண்டும் என்பது பிழையானது. ஒரு நோயாளியை நாம் எம்மிடம் ஒரு வருடம் வரச்சொல்வதில்லை. கூடினால் எமது சிகிச்சைகள் 48 நாட்களே தொடரும். பரிசோதிக்கப்பட்டு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ள நபர்களை நாம் பொறுப்பேற்பதில்லை. ஆனால் பலாத்காரமாக வருகிறார்கள். ரக்வானையை சேர்ந்த 19வயது இளைஞன் ஒருவன் அப்படி எம்மிடம் அழைத்து வரப்பட்டான். அவனது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த நோன்பு மாதம் முழுவதும் நோன்பு நோற்றார். தற்போது அவர் சுகமான நிலையில் உள்ளார். எமது சிகிச்சைகளால் குணமடைந்த 200இற்கும் மேற்பட்டவர்களின் விபரங்களை எமக்கு தர முடியும். நீரிழிவு முழுமையாக குணமடைந்த 20 நோயாளர்களின் விபரங்களை தர முடியும்.

மருந்துகளை தயாரிக்கும் முறை

ஆயுர்வேத மருத்துவ சபையில் பணியாற்றும் டொக்டர் ஷான் அஜ்மிரின் கல்கிஸையில் அமைந்துள்ள மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் எமது மருந்துகளை உற்பத்திசெய்கின்றோம். ஆயுர்வேத அனுமதி பெற்றுள்ள அவ்விடத்தில் இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு மருந்துகளை தயாரிக்கின்றோம்.

6 நாள் மருத்துவப் பாடநெறி

வீடுகளில் சாதாரணமாக மருத்துவம் செய்துகொள்ளும் இஸ்லாமிய வழிகாட்டல்களை கொடுத்து வருகின்றேன். வீட்டுக்கொரு மருத்துவர் என்ற செயற்திட்டத்தின் கீழ் இஸ்லாமிய மருத்துவம் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் இதனை செய்கின்றேன். வீட்டில் மருத்துவம் செய்துகொள்பவருக்கு மருத்துவர் என்று சொல்லலாம். நாம் யாருக்கும் சிகிச்சை நிலையமொன்றை ஆரம்பித்து நோய்களுக்கு சிகிச்சையளிக்குமாறு கோரவில்லை. என்னிடம் பயிற்சிகளை பெற்றுக்கொண்ட சிஷ்யர்கள் கிராமங்களில் சிகிச்சையளித்து வருவதாக குறிப்பிடுகிறார்கள். அப்படிக் கூறுபவர்கள் இருந்தால் என்னிடம் வந்து உரையாடுங்கள்.

பிரசவம் பார்ப்பது தொடர்பில்

பிரசவம் வீட்டில் பார்க்க வேண்டும் என்று பேசியுள்ளோம். அரசாங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதற்கான புரட்சி நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும்.  உலக மனிதர்களின் வரலாறு 8000 வருடங்கள் எனில் ஆங்கில மருத்துவத்தின் வரலாறு 200 வருடங்களும் இல்லை. அப்படியென்றால் 6000 வருடங்களாக மக்கள் வாழவில்லையா? வீட்டில் பிரசவம் பார்த்ததில் பாதிப்புக்கள் ஏற்பட்ட 11 சம்பவங்கள் உள்ளன. இச்சம்பவங்களை எம்மீது சுமத்துகிறார்கள். இச்சம்பவங்கள் குறித்து நாம் ஆராய்ந்தோம். அதில் ஒன்று ஏத்தாளையில் நடந்த சம்பவம். ஏத்தாளை உமர் (ரலி) குழுவிலிருந்து பிரிந்து சென்ற ஒரு குழு மருத்துவமனைக்கு செல்வதில்லை.

அக்குழுவினை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு பிரசம் பார்த்து குடலை கத்தியால் அறுத்துள்ளார். தாயின் வயிற்றில் கிருமி தொற்றியதால் அவள் மரணித்துள்ளார். அச்சம்பவத்திற்கு காரணமானவர் இன்று சிறையில் உள்ளார். அம்பாறையில் ஒரு பகுதியில் சித்தீக் என்பவர் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த போது அவள் இறந்துள்ளார். வீட்டில் பிரசவம் பார்க்க வேண்டும் என்ற கருத்தை கூறியதற்கு இச்சம்பவங்களை எனக்கெதிராக சாட்டுகிறார்கள்.

மேற்குலக நாடுகளில் இன்று வீடுகளிலேயே பிரசவம் பார்க்கப் படுகின்றது. இலங்கையில் இன்று 53 வீதமான பிரசவங்கள் மருத்துவமனைகளில் செய்யப்படுகின்றது. இலங்கையின் சனத்தொகை கடந்த 25 வருடங்களில் 22 லட்சத்தால் குறைந்துள்ளது.

Related image
‘மடத்தனமான பிரச்சாரங்கள்’
– Dr. ரயீஸ் முஸ்தபா       

தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை சொல்லி வருகின்றார்கள். எமது சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். தடுப்பூசிக்கும் யூதர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 50 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் ஒவ்வொரு வீட்டிலும் போலியோவால் பாதிக்கப்பட்ட முடமான பிள்ளைகள் காணப்பட்டார்கள். தடுப்பூசி மருந்துகள் ஏற்றப்பட்டமையினாலேயே போலியோ இல்லாமல் போனது. நியுமோகொகைல் என்றொரு தடுப்பூசி உள்ளது. இந்தத் தடுப்பூசி ஏற்றப்படுவதன் மூலம் மூளைக் காய்ச்சல் வருவது குறைவு. ஒரு முறை ஒரு பிள்ளைக்கு மூளைக் காய்ச்சல் வந்து அதனால் அப்பிள்ளையின் காது செவிடாகியது. அந்தப் பிள்ளை என்னிடம் அழைத்து வரப்பட்டது. அப்பிள்ளையை பரிசோதித்த போது நியுமோ கொகைல் பிள்ளையின் உடம்பில் சென்றிருப்பதை அறிந்து கொண்டேன். நீங்கள் இந்தப் பிள்ளைக்கு தடுப்பூசி ஏற்றவில்லையா? தடுப்பூசி ஏற்றியிருந்தால் இப்படி வந்திருக்காதே என்று நான் பிள்ளையின் பெற்றோரிடம் கூறினேன். அப்போது அவர்கள், தடுப்பூசி போடக்கூடாதென்று ஒரு கூட்டத்தில் சொன்னார்கள் அதனால் நாம் போட வில்லை என்றார்கள்.

தற்போது இந்தப் பிள்ளைக்கு கொக்லியோ இன்பிளான்ட் (காதில் உள்ள கொக்லியரை மாற்ற வேண்டும்) செய்ய வேண்டும் என்றும், இலங்கையில் இதைச் செய்வதென்றால் 37 லட்சம் செலவாகும் என்றும் கூறினேன். 37 லட்சம் செலவு செய்து கொக்லியோ இன்பிளான்ட் செய்ய வேண்டும், அப்படிச் செய்தாலும் 10 வீதமே முன்னேற்றம் வரும் என்றேன். பள்ளிவாயல்களிலும் கூட்டங்களிலும் தடுப்பூசி கூடாதென குறிப்பிடுபவர்கள் சிகிச்சை நிலையங்களில் இவ்வாறான சம்பவத்தை காண்பதில்லை. அந்தப் பெற்றோர் என் முன்னால் அழுத அழுகை என் கண்ணுக்குள் அப்படியே பதிந்திருக்கிறது. தடுப்பூசி தேவையில்லை எனக் கூறுபவர்கள் எந்த விதமான அறிவுப் பின்னணியும் இன்றி சமூகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை செய்து வருகின்றனர்.

இலங்கையில் தற்பொழுது போலியோ நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் போலியோ நோய் காணப்படுகிறது. பாகிஸ்தானில் போலி யோ மருந்து கொடுக்கச் சென்ற வைத்தியர்கள் மீது தலிபான் கள் துப்பாக்கிச் சூடு நடாதியுள்ளனர். நைஜீரியாவில் போலியோ நோய் முற்றாக இல்லாமல் இருந்தது. ஆனால் அறிவில்லாத சிலர் போலியோ ஹராம், தடுப்பூசி கூடாதென்ற கருத்துக்களை மக்களிடம் கூறியமையினால் அங்கு போலியோ தடுப்பு மருந்து நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 வருடங்களாக போலியோ மருந்தின்றி பிள்ளைகள் முடமாகத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நைஜீரிய ஜம்மிய்யத்துல் உலமா முன்வந்து இது ஹராமில்லை, இந்தத் தடுப்பூசியை போடுங்கள் என மிகப்பெரும் பிரசாரத்தை மேற்கொண்டார்கள். அதன் பின்னரே அங்கு  சுகமான நிலை வந்துள்ளது.

அறிவற்ற சமூகமே அறிவிலிகளின் கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கலீபா உமர் (ரலி) அவர்கள் மிம்பர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பெண் எழுந்து நின்று கேள்வியொன்றை கேட்டுள்ளார். அந்தப் பரம்பரையில் வந்தவர்களே நாங்கள். கதைப்பவர்கள் மோட்டுத்தனமான முறையில் கதைப்பார்கள். ஆனால் நாம் அவற்றை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்க கூடாது. எழுந்து நின்று கேள்வியெழுப்ப வேண்டும். அப்படியானதொரு சமூகமே உருவாக வேண்டும். தடுப்பூசி, தடுப்பு மருந்துகளில் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. அவற்றை கட்டாயம் போடுங்கள். கொழும்பு கண்டி வீதியில் எத்தனையோ விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அதற்காக வேண்டி நான் கொழும்புக்கு போகாமல் இருக்க முடியாது. ஆபத்துக்கள் இடம்பெறத் தான் செய்யும். இது போன்று தான் எல்லா விடயங்களும். தலைவலிக்கு பெனடோல் குடிக்கிறோம். அதிகம் பணடோல் அருந்தினால் ஈரல் பழுதடைந்துவிடும். இதிலும் ஆபத்து இருக்கிறது.

ஆபத்தில்லாத வாழ்வில்லை. இந்தச் சமூகத்தை மீண்டும் குட்டிச்சுவராக்கும் கூட்டமொன்று உள்ளது. அவர்களே இந்த மடத்தனமான பிரச்சாரங்களை முன்னெடுக் கின்றனர். ஏற்கனவே நாம் அரசியல், பொருளாதார, சுகாதார, அறிவுத்துறைகளில் பின்தங் கியவர்களாக இருக்கிறோம்.
இலங்கையில் உள்ள 10 வீத முஸ்லிம்களுள் 23 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 வீதமான முஸ்லிம்களுக்கு ஏதாவது நோயிருக்கிறது. சிங்களவர்களுள் 22 வீதமானவர்களுக்கே நோயுள்ளது. தமிழர்களில் 20 வீதமானவர்களுக்கே நோயுள்ளது. ஆனால் முஸ்லிம்களில் 43 வீதமானவர்களுக்கு நோயுள்ளது. எனவே இப்படிப் பின்தங்கிய நிலையில் அடிமட்டத்தில் உள்ள சமூகத்தை இன்னும் பூமியில் புதைக்கும் நடவடிக்கைகளையே இவர்கள் மேற்கொள்கிறார்கள். இதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம்.


‘பிற்போக்குத்தனமான சிந்தனைகள்’
Dr.மிப்ராஸ் ஷஹீத் – மாவட்ட பொதுவைத்தியசாலை, பொலன்னறுவ.

சத்திரசிகிச்சை கூடாதென கூறுகிறார்கள். ஆனால் The Father of Surgery என்பதாக அஸ்ஸஹ்லாவி என்ற வைத்தியரை மேற்குலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கையில் நாம் சிறுபான்மைச் சமூகமாக வாழ்கின்றோம். மாற்றுமதத்தவர்களுக்கு முன்மாதிரி மிக்கவர்களாக வாழ வேண்டும். ஆனால், காலத்திற்கு ஒவ்வாத சிந்தனைகளை கொண்டவர்களாக எங்களை நாம் அடையாளப்படுத்துவது எமது சமூகத்தின் வளர்ச்சியையே தூரப்படுத்தும்.

மார்க்கத்தை முற்படுத்திய இவ்வாறான பிற்போக்குத்தனமான சிந்தனைகள் சமூகத்தில் பரவிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான விடயமல்ல. முன்னைய காலங்களில் வீட்டுப் பிரசவங்கள் அதிகம் நடைபெற்றது. முன்பு சனத்தொகை குறைவாக காணப்பட்டது. முன்னர் பிரசவத்தின் போதான தாய்மார்களின் இறப்புவீதம் அதிகமாக காணப்பட்டது. தற்பொழுது சனத்தொகை அதிகம் என்பதால் தாய்மார்களின் இறப்பு வீதம் குறைவாக காணப்படுகிறது. அதாவது இலங்கையில் 1 லட்சம் குழந்தைகள் பிறந்தால் 33 தாய்மார்களே இறக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமமாகவும், அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளை விட மிக குறைவாகவும் காணப்படுகின்றது. இலங்கையின் சுகாதாரத்துறை வளர்ச்சியே இதற்கு காரணம். பிரசவத்தின் போது ஒரு தாய் மரணித்தால் உலக சுகாதார தாபனத்தின் விசாரணைகளுக்கு எமக்கு முகம் கொடுக்க நேரிடும். எனவே இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடைவதற்கு இப்படியான பிற்போக்குத்தனமான கருத்துக்கள் அடிப்படையாக அமையும்.
முன்னைய காலங்களில் எத்தனை பிள்ளைகள் பிறந்தார்கள் என்ற செய்தியை கூறும் நாம் அதற்கு பின்னால் எத்தனை தாய்மார்கள் இறந்திருக்கிறார்கள் என்கின்ற செய்தியை பார்ப்பதில்லை. இரத்தப்போக்கு, தொற்று நோய் காரணமாக எத்தனையோ தாய்மார்கள் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?

இவர்கள் ஏன் இவ்வாறான கருத்துக்களை பரப்புகிறார்கள்? எந்தப் பின்னணியில் இதனைச் செய்கிறார்கள்? என்பது எமக்கு தெரியாது. ஆனால் இப்படியான சமூக விரோதக் கருத்துக்கள் சமூகத்தி லிருந்து களையப்பட வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.


‘ஜம்மிய்யதுல் உலமா பதில்  சொல்ல வேண்டும்’
 – சகோதரர் ராபி ஷரீப்தீன்
பின்னூரி வீட்டுக்கொரு வைத்தியர் திட்டம்

இந்தியாவை வந்தடைந்த இந்த போலி மருத்துவ முறை பின்னூரி பட்டத்தை பயன்படுத்தும் ஒரு மார்க்க அறிஞரால் சில வருடங்களுக்கு முன்னர்  இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த வைத்திய முறைகளை இலங்கையில் அறிமுகம் செய்வதற்காக இவர் பயன்படுத்திய ஊடகம் மிம்பர் மேடைகளே. ஊர் ஊராக சென்ற இவர் நிகாப் வாஜிப், ஆங்கில வைத்திய முறைகள் ஹராம்,  பாடசாலைக் கல்வி கூட ஹராம்,  சத்திர சிகிக்சை ஹராம் என்பது போன்று தனது இஷ்டத்துக்கு ஏற்ப பத்வாக்களை அள்ளி வீசினார். அத்துடன் இவற்றுக்கு மாற்றீடாக இஸ்லாமிய வைத்திய முறை உள்ளதாகக் கூறி அக்குபன்சர் வைத்தியத்தை அறிமுகப்படுத்த அடித்தளம் அமைத்துக் கொண்டார்.  இவரது பேச்சு பாமர மக்களை கவரத்துவங்கியது.
இந்த அடிப்படையில் மாரக்கத்தை விற்றுப் பிழைப்பு நடாத்தி இந்த ஆலிம் தனது சீடர்களின் மனைவியருக்கு வீடுகளிலேயே பிரசவம் பார்க்கவேண்டும் என்பதாகவும்  வற்புறுத்தலானார். இந்த விசமத்தனமான பிரச்சாரம் மூலம் பிரசவத்தின் போதான தாய் சேய் இறப்பு வீதம் (Maternal and Infant Mortality Rate)  முஸ்லிம்கள் மத்தியில் எதிர்காலத்தில் அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளின் இலக்குகளின் ஒன்றாக இருக்கும் முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பை எவ்வழியில் எனினும் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற ஒரு வழியில் நுஸ்ரான் பின்நூரி துணைபோகிறார்.

பல சவால்களை எதிர்கொண்டு தமது பாரம்பரிய துறையில் கற்றுத் தேர்ந்து, இக்கலைகளை அடுத்த சந்ததிக்கும் கடத்தும் நோக்கில் வாழ்பவர்களைக் கொச்சைப்படுத்தி, அவர்கள் கற்ற கலையை குழி தோன்றிப் புதைக்கும் ஒரு செயலாகவே இந்த ஆறு நாள் பாடநெறியை நான் நோக்குகின்றேன்.
பின்னூரி கூட்டணி இஸ்லாமிய பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் கருஞ் சீரகத்தை பன்னீர் விட்டு அறைத்து வெஸ்லின் ஒரு பங்கும் மென்தோல் சிறிதும் சேர்த்து இது தான் ராஹா பாம் என்கின்றனர். அதே கருஞ்சீரகத்தை பன்னீர் விட்டு அறைத்து ராஹா கருச்சீரக கிரீம் என்கின்றனர். இதனுடன் நின்றுவிடாமல் 4 லீட்டர்  கருஞ்சீரக எண்ணெய் கேன்களை வாங்கி ராஹா லேபல் ஒட்டிய குப்பிகளில் அடைத்து சுத்தமானது சுகாதாரமானது என்கின்றனர்.

ஒரு ஹீலர் தன்னிடம் வருபவரது நோய் பட்டியலில் இல்லாத போது தாம் இருக்கும் லட்சம் குரூப்பில் குறித்த நோய்க்கு தீர்வுகளை வினவுவார். அடுத்த நொடியே தலைமையகத்தில் இருப்பவர் எந்தப் பொய்ன்டில் டச் பண்ண வேண்டும் என்பதுடன் இந்த இலக்க ராஹா டப்பாவிலிருக்கும் மருந்தைக் கொடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்குவார். கொடுத்துப் பார்க்கவும் குணம் கிட்டாவிட்டால் தலைமையகத்துக்கு பேசன்டை அனுப்பவும் என கூறி விடுவார். குறித்த மருந்தில் குணமாகாதபோது அது ரூஹானியத்து சம்பந்தபட்ட பிரச்சினையாக இனங்காணப்படும். அதன் பின் தலைமையகததில் உள்ள சாசிமி தாயத்து கட்டும் பணியை ஆரம்பிப்பார்.

அத்துடன் இந்த ஆறு நாள் மருத்துவர்  பித்தலாட்டக் குழுவில் தற்போதைய ஜம்மியதுல் உலமாவில்   அங்கத்தவர்களில் பலரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். முஸ்லிம் சமூகத்திற்கு நாமே தலைமைத்துவத்தை வழங்குகின்றோம் என கூறிக் கொள்பவர்கள் என்ற அடிப்படையில் அகில இலங்கை ஜம்மிதுல் உலமா இந்த பாடநெறி குறித்து தமது நிலைப்பாட்டை மக்களுக்கு வழங்கியே ஆகவேண்டும்.

தொகுப்பு: ஹெட்டி ரம்சி, பியாஸ் முஹம்மத், முஜீபுர் ரஹ்மான்


நன்றி -
மீள்பார்வை இதழ் 398

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக