செவ்வாய், 26 ஜூன், 2018

மொழி வசதிகளை வழங்குவோராகத் தெரிவுசெய்யப்பட்டோருக்கு இன்னுமொரு பரீட்சையா?


மொழி வசதிகள் வழங்குநர்கள் விசனம்

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் www.bhashawa.lk இணையத்தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள, மொழி வழங்குநருக்கான மதிப்பீட்டுப் பரீட்சையானது எதிர்வரும் 2018.06.30 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப. 4.30 மணிவரை நாவல - திறந்த பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளதாக அரச கரும மொழிகள் ஆணையாளர் திரு. கே.எஸ்.ஆர்.  பெரேரா தெரிவித்துள்ளார். 

இந்தப் பரீட்சை தொடர்பில் மொழி வசதிகளை வழங்குநர்களில் பலரும் தங்களது கடும் விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியிலான மொழி வசதிகளை வழங்குநர்களைக் கொண்ட, மொழிவழங்குநர் சங்கம் இதுதொடர்பில் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில்,

“இலங்கைவாழ் மக்களிடத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் உயரிய நோக்கில் மாவட்ட மட்டத்தில் இருமொழி, மும்மொழி ஆற்றல் மிக்க குழாம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்காக, விருப்புடையவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2016.04.09 ஆம் திகதி கொழும்பில் திறந்த போட்டிப் பரீட்சையொன்றை நடாத்தியது.

எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றிய ஆயிரக்கணக்கான பரீட்சாரத்திகளிலிருந்து அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்கள் அனைவரும் வாய்மொழிப் பரீட்சைக்கும், கேட்டல் பரீட்சைக்கும் அழைக்கப்பட்டு, அவர்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 463  பேர் அவ் உயரிய கடமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 3 நாட்கள் வதிவிடச் செயலமர்வும் நடாத்தப்பட்டது. மேலும் அவர்களுக்காக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது எனக் கூறி, அவர்களின் தகவல்களை அனுப்பிவைக்குமாறும் கோரப்பட்டது. 

இஃது இவ்வாறு இருக்க, அரசகரும மொழிகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள, மேற்படி மொழி வசதிகளை வழங்குவோருக்கான மதிப்பீட்டுப் பரீட்சையொன்று எதிர்வரும் 2018.06.30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், அதற்காக இருமொழி மற்றும் மும்மொழி ஆற்றல் மிக்கவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பரீட்சையில் கலந்து கொள்வதற்கான அனுமதி அட்டைகளை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளது.

போட்டிப் பரீட்சை மற்றும் கேட்டல் - வாய்மொழிப் பரீட்சைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டிப் பரீட்சை எதற்காக நடாத்தப்பட வேண்டும்?

இது அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களை அலைக்கழிக்கும் - அரசாங்கத்தை அவமானத்திற்குள்ளாக்கும் செயல் இல்லையா?

இச்செயற்றிட்டத்துடன் தொடர்புடைய அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அதற்கான சகல கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்வதோடு, இந்த மொழி வசதிகளை வழங்குவோர் எவ்விதக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் அடிக்கடி கொழும்புக்கு அழைக்கப்படுகின்றனர். இதனால் மொழி வசதிகளை வழங்குவோர் பெரும் அசௌகரியங்களையும், இதுதொடர்பில் அதிருப்தியும் அடைந்துவருகின்றனர்.

எனவும், இதுதொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொறுப்புவாய்ந்த அமைச்சர் உடனடியாகத் தீர்மானம் எடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

-கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக