சனி, 16 ஜூன், 2018

அ.இ.ஜ.உ. அனைவருக்கும் பொதுவாக நடப்பது எப்போது?

- ரிஷாத் (இஸ்லாஹி)

தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுங்கள் அவர்கள் தவறிழைத்தால் அதற்குரிய தண்டனை அவர்களுக்கு கிடைக்கும் என்றொரு கருத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் உண்டு!

இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழுகின்ற நாடுகளில் அவர்களது சமூக,சமய விடயங்களுக்கு தலைமை வகிப்போராக அவ்வந்த நாடுகளில் உள்ள உலமாக்களின் மார்க்க அறிஞர்களின் சபை காணப்படும்.

இவர்கள் முழுத்தேசத்தின் ஆட்சியதிகாரம் அற்றவர்களாக இருந்தாலும் அவர்களது சமூகத்தின் ஆன்மீக தலைமையாக இருப்பார்கள்.

மார்க்கத்தில் எழும் சந்தேகங்கள், பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல் ( ஃபத்வா), ஆன்மீக பயிற்சிகளை வழங்குதல், இஸ்லாமிய பிரச்சாரம், சமூகவியல் சார் வழிகாட்டுதல்கள், தேசிய நல்லிணக்க பணிகள், நோன்பு- இரு பெருநாள்கள் தொடர்பான தீர்மானங்கள் என இவர்கள் கவனிக்க வேண்டிய பணிகள் ஏராளம் வரிசையில் உள்ளன.

இஸ்லாமிய ஆட்சி இல்லாத அல்லது முஸ்லிம்களால் ஆளப்படாத ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய தேசங்களில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் இவ்வாறான மார்க்க அறிஞர்களின் சபைகள் ( Islamic Scholars Organisation/ Islamic Theologian's forum) வினைத்திறனோடு இயங்கிவருவதை அவதானிக்க முடியுமாக உள்ளது. காரணம் அதன் நிர்வாகிகள் அவர்கள் சார்ந்த இயக்கங்களை பிரதிநிதித்துவம் செய்யாமல் முழு சமூகத்துக்கும் பொதுவானவர்களாக இயங்குவதேயாகும்.

இலங்கை முஸ்லிம்களுக்கு ஆன்மீக/சமூக தலைமைத்துவத்தினை வழங்கும் பொறுப்பு வாய்ந்த பணியினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கொண்டுள்ளது.

நீண்ட நெடுங்காலமாக இந்த ஆன்மீக தலைமைத்துவம் பல்வேறு நல்ல பணிகளை செய்து வந்திருக்கிற போதிலும் அவ்வப்போது சறுக்கல்களையும் , குழறுபடிகளையும் சந்தித்துள்ளது. அதற்கு அடிப்படை காரணம் தாம் சாராத கொள்கை வாதிகளை மட்டந்தட்ட நினைப்பதாகும். இதுவே ஹி 1439 ( 2018) ஷவ்வால் மாத தலைப்பிறை விடயத்திலும் அவதானிக்க முடிந்தது.

இதற்கு அந்த அமைப்பை ஒட்டு மொத்தமாக குறைசொல்வதை விட ஒரு சில தலைமை/ நிர்வாக அதிகாரம் சார்ந்த பொறுப்புகளில் இருந்த/இருக்கிற நபர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளை காரணமாக கூறலாம்.

இப்போது மீண்டும் சூடு பிடித்திருக்கும் நோன்பு பெருநாள் பிறை தொடர்பான சர்ச்சைகளிலும் பிறைக்குழு தொடர்பு பட்டாலும் பொதுவாக ஜம்இய்யதுல் உலமாவின் செயற்பாடுகள் தான் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனங்களிற்கும் இலக்காகியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை முஸ்லிம்கள் பலர் அதன் தீர்மானங்களை உதறிதள்ளிவிட்டு வெவ்வேறு தலைமைகள் இயக்கங்களின் பின்னால் அள்ளுண்டு போவதை அவதானிக்க முடிகின்ற அதே வேலை மாற்றுத் தீர்வும் அவர்களுக்கு இல்லாத நிலையையும் அவதானிக்க முடியுமாக உள்ளது.

இது ஆரோக்கியமான நிலை அல்ல.

இதுவரை காலமும் பிறைவிடயத்தில் ஜம்இய்யாவிற்கு கட்டுப்பட்டு வந்த இயக்க நிலைகள் சாராத சாதாரண மக்களும் அதீத விரக்தியோடும், குழப்பத்தோடும் காணப்படுகின்றனர்.

இயக்கம், சிந்தனை வேறுபாடுகள் களைந்து அனைத்து தரப்பு உலமாக்களையும் உள்வாங்கியிருக்கும், இலங்கை முஸ்லிம்களை வழிகாட்ட வேண்டிய பொறுப்பை சுமந்திருக்கும் அஇஜ உலமா தன்மீதான விமர்சனங்களை தீவிரமாக சுயவிசாரணைக்கு உட்படுத்தி புதிய இயங்கு தளமொன்றில் பயணிக்க வேண்டிய அவசர நிலை உருவாகியுள்ளது.

இந்த அபாயத்தை சரியாக உணராமல் தனது வழமையான பாணியில் அது தொடர்ந்தும் பயணிக்குமேயானால் அதன் மீது கடைசித்துளி நம்பிக்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் எஞ்சிய இலங்கை முஸ்லிம்களும் அதனை உதறி வீசிவிடுகிற ஆபத்தான நிலை உருவாகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

மார்க்க விடயங்களில் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பிரிந்து சென்று தனியாக பள்ளிகள் அமைத்தவர்கள் கூட அஇஜ உலமாவிற்கு பிறை உட்பட பல விடயங்களில் கட்டுப்பட்டு வந்ததை அவதானிக்க முடியுமாக இருந்தது. அந்நிலை அஇஜ உலமா நிர்வாகிகளின் பொறுப்பற்ற செயல்கள் காரணமாக இல்லாது போகவும் வாய்ப்பு உள்ளது. அதையே இம்முறை தலைப்பிறை விடயத்திலும் அவதானிக்க முடிந்தது.

தலைவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ஒரே மாதிரியான தவறுகளுக்கு நாமும் கண்ணை மூடிக்கொண்டு தொடர்ச்சியாக கட்டுப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டுமா? என்று பலர் கேள்வி கேட்கும் நிலையை அஇஜ உலமாவின் நிர்வாகிகள் உருவாக்கி உள்ளனர். இந்த நிலை வரக்கூடாது என்பதற்காக தான் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தூர நோக்குடன் கின்னியா பிறைப் பிரச்சினையின் போது தனி நபராக நின்று கருத்து தெரிவித்தார். ஆனால் அதை விமர்சன கண்ணோட்டத்தில் பார்த்து விமர்சித்தார்களே தவிர ஆக்கபூர்வமான கருத்தாக யாரும் பார்க்க முன்வரவில்லை. அதன் விளைவையே அஇஜ உலமா இன்று அனுபவிக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

தற்போதாவது இலங்கை நாட்டின் முஸ்லிம்களின் இன்றைய எதிர்கால நிலைகளை கருத்திற்கொண்டு அஇஜ உலமா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட சமூகத்தில் உள்ள அமைப்புக்களின் இயக்கங்களின் பொறுப்புகளில் உள்ள அனைவரும் இதுபற்றி சிந்தித்து காத்திரமான ஒரு முடிவுக்கு வருவது காலத்தின் தேவையாகும்.

ரிஷாத் இஸ்லாஹி. 
(முஸ்லிம் விவாகப் பதிவாளர்)
நாபாவலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக