வியாழன், 14 ஜூன், 2018

மக்களை சங்கடத்துக்குள்ளாக்கும் பிறை விவகாரம்

(ஜெஸ்மி எம்.மூஸா)

இலங்கையில் பிறை விவகாரம் எப்போதும் கேலிக் கூத்தானதாகவும் சர்ச்சைக்குரியதாகவுமே மாறி வருகின்றது
சர்வதேசமா? உள்நாடா? ஏன்பதற்கப்பால் இமாம்களுக்கிடையே காணப்படும் இறுமாப்பும் பிறைக்குழுவினரின் தான்தோன்றித்தனமான முடிவுகளும் பொதுமக்களைத் தொடர்ந்தும் சங்கடத்துக்குள்ளாக்கி  வருகின்றன
கடந்த சில வருடங்களுக்கு முன்; ஒரு தடவை காணப்பட்ட பிறையினை பிறைக்குழு ஏற்றுக் கொள்ளாத போது பிறை கண்டவர்களை மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத புலனாய்வு விசாரணை செய்து அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த போதும் அப்பிறை சரியானதா? இல்லையா? என்ற சந்தேகத்தை பிறைக்குழு தோற்றுவித்தது. இதனால் சந்தேகத்துக்குரிய பிறையாக அது மாற “சந்தேகத்துக்குரிய நாட்களில் நோன்பு நோற்பது ஹறாம்” என்ற அடிப்படையில் பெருநாளும் அல்லாமல் நோன்பும் அல்லாமல் அன்றைய தினம் கணக்காகி சில இடங்களில் அடுத்த நாள் பெருநாள் கொண்டாடப்பட்டது.

அவ்வாறே கடந்த நான்கு வருடங்களுக்கு முன் பல இடங்களில் காணப்பட்ட பிறையும் ஏற்றுக் கொள்ளப்படாத போது உலமாக்களுக்கிடையிலான குழப்ப நிலையினை அடுத்து இரு தினங்கள் அவரவர்களுக்குக் கிடைத்த விளக்கம் போல் பெருநாள் கொண்டாடப்பட்டது. இறுதியில் பெருநாள் பிறை கண்ட மறுநாள் பெருநாள் கொண்டாடியமையே சரி என றிஸ்வி முப்தி மன்னிப்புக் கோரிய வரலாறுகள் நடந்து முடிந்துள்ளன.

இம்முறை தலைப்பிறை காண்பதில் ஏற்பட்ட தெளிவின்மையால் இலங்கை முழுவதும் தெரிந்த தலைப்பிறை பெரியதாகவும் நீண்ட நேரமும் காட்சி அளித்தது. இதனைக் கொண்டும் காலநிலைச் சரிதவியலாளரின் கூற்றுப்படியும் இப்பிறை இரண்டு அல்லது மூன்றாம் பிறையாக இருக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் வெளியிட்ட உரையொன்றிலும் இக்கருத்தை அடியொட்டி சில வேளை நோன்பு 28 இல் முடிந்தால் பெருநாளைக் கொண்டாடி விட்டு மறுநாள் ஒரு நோன்பை கழா செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். உண்மையில் இக் கூற்று இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டதாகவும் இஜ்திஹாத்திற்குள் பலம் உள்ளதாகவும் இருந்தது. இலங்கையிலுள்ள முன்னணி இமாம்களான கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி உள்ளிட்ட பலர் இக்கருத்தை ஆதரித்து இது ஷரிஆ சட்டத்திற்கு உட்பட்டது என்ற கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.

இப்போது மக்கள் (இன்று) வியாழக்கிழமை ஷவ்வால் தலைப்பிறை பார்க்கத் தயாரான நிலையின் கொழும்பு பெரியபள்ளிவாசலின் பிறைக்குமு வெள்ளிக்கிழமை பிறையினைப் பார்க்குமாறு ஊடகங்களில் அறிவித்துள்ளது. உண்மையில் இவ்அறிவிப்பு மார்க்க விடயத்தில் மிகச்சாதாரணமான அறிந்தவர்களிடத்திலும் நகைப்புக்கிடமானதாகவே உள்ளது.

மார்க்க ரீதியாக அணுகும் போது (இன்று) வியாழன் இரவு பிறை பார்க்கக் கூடாது எனக் கூறுவது மிகப்பெரிய அநியாயமாகும். அதே வேளை பிறை பார்க்கும் விடயத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையினை மீறிய இவ் அறிவிப்பு மிகப்பெரிய உரிமை மீறலுமாகும். ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் கூறியுள்ள கருத்து ஆதாரபூர்வமாக இருக்கும் போது அதை மறுதலிப்பது பெரியபள்ளவாசலின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறான போதிலும் (இன்று) வியாழன் பிறை காணப்படுமாயின் அதனை எல்லோரும் ஏற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை பெருநாளைக் கொண்டாடி மறுநாள் நோன்பு பிடிப்பதே பித்னாக்கள் ஏற்படாமல் இருப்பதற்குரிய வழிமுறையாகும். அவ்வாறில்லாமல் பிறை கண்டும் பெரியபள்ளிவாசலோ பிறைக்குழுவோ மறுக்குமாயின் அவர்களில் ஒரு கூட்டத்தைத் தவிர எல்லாரும் பெருநாள் கொண்டாட வேண்டிவரும். மீண்டுமொரு முறை பொதுமக்களைத் தவறிழைக்க வைப்பதற்கு குறித்த தரப்பினர் முனைவதாகவே இது அமையும்
இச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் இன்று பிறை தென்படாமல் இருப்பதே சிறந்ததாகும். அது அழ்ழாவின் புறத்திலுள்ளதாகும். இஜ்திஹாத் முடிவில் நல்லதுக்கு இரண்டு கூலியும் முடிவு பிசகினால் ஒரு கூலியும் போல் என்ன முடிவுவந்தாலும் பெரியபள்ளிவாசலின் முடிவு விமர்சிக்கப்படுவது உறுதி. இந்நிலை தொடரவிடாமல் பாதுகாப்பது உலமாக்களின் பொறுப்பாகும். 

ரமழான் காலங்களில் மாத்திரம் இது பற்றிப் பேசாமல் தீர்க்கமான பொறிமுறையொன்றை நோக்கி பிறைக்குழுவைக் கொண்டுவர வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஊடகப்பரவலாக்கல் மிக்க இக்காலத்தில் முடிவுகள் தீர்க்கமானதாக அமைவது காலத்தின் தேவையுமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக