ஞாயிறு, 3 ஜூன், 2018

அடி ரெபேக்கா நீயாடி அவள்? - கலைமகன் பைரூஸ்


இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும்
இல்லாதொழிப்பதற்காக
இஸ்ரேலிய மமதையோடு
இம்சிக்கின்றாய் காஸாவை...
அடி ரெபேக்கா நீயாடி - எம்
அடிநெஞ்சின் ஆழத்தில்
இஸ்லாத்தை ஏந்தி
இடர்படுவோர்க்கு நல்லன செய்த
பலஸ்தீன வீர மங்கை - தாதி
ரஸான் அல் நஜ்ஜாரை
குறிவைத்த மாபாவி?

ஷஹீதானாலும் பலஸ்தீனத்தின்
அசையாத நம்பிக்கைக் கொடியுடன்
எவ்விதப் பாரமுமற்ற - விலையற்ற
கவனுடன் வீரப் போர்செய்கின்ற
அல்லாஹ்வையே சதாவும் நினைக்கின்ற

இன்ஸான்கள் வாழ்கின்ற பூமி
காஸா மண்!

அந்த மண்ணின் விடிவுக்காய்
உயிர்த் தியாகம் செய்கின்ற
உத்தமர்களின் காயங்களை
தன் காயமாய்க் கண்டு
செல்களின் கனசத்தத்தையும்
காதுகளில் சேர்க்காமல்
பயங்கர பாலைவனத்தில்
கூடரங்களில் நின்று பணிபுரிந்த
வீரமங்கையடி ரஸான் அல்நஜ்ஜார்...!

அடி ரெபேக்கா...!
உன்னைப் போல் பதுங்கி
கோழைத்தனமாய் ஷஹீத் ரஸான்
ஒழித்துப் பணிபுரியவில்லையடி
பணத்துக்காக மனித நேயம்தொலைத்து
இரத்தக் காட்டேறியாக வலம்வரும்
உன்னைப் போல் இல்லையடி அவர்
எல்லாம் வல்ல இறைவனுக்காக
மறைத்தலின் அழகுடன்
அந்தக் கொடூர பூமியிலும்
நாளும் பணிபுரிந்த “டெஸட் குயின்”
எங்கள் ரஸான் அல் நஜ்ஜார்!

என்னதான் குரோதங்கள் என்றாலும்
பெண் பெண்ணுக்கு இறங்குவாள்
நீ பெண்ணாயிருந்தால்தானே
அடுத்தவளின் துன்பம் உனக்குப் புரியும்.
ரஸான் “கிரேட் ரிட்டன்” னில் இறந்ததாக
உள்மனதில் ஆனந்தக் கூத்தாடுகிறாய்
கள்ளுண்ணும் பேடிகளுடன்....!

நிச்சயம் அல்லாஹ்வின் அர்சுப் பூங்கா
ரஸான் அல்நஜ்ஜாருக்காகவும் காத்துநிற்கும்...
அவன் தானே கூலிவழங்குவதாய்ச் சொன்ன
அருள்மிகு மாதத்தில் நல்லியத்தை இம்சித்தாய்...

உலகினுக்கு உண்மைகளை உரத்துச் சொல்லும்
ஊடகவியலாளனும் உதவிநல்கும் தாதிமாரும்
உங்கள் குறியாக இருக்கலாம்... உங்கள் இலக்குகள்
இலக்கு மாறி உங்களையே குறிபார்க்கும் நாள்
மிக அருகிலேயே உங்களை அடையும்!

ரமழானின் பதினைந்தாம் பிறைபோன்ற வதனம்
ரமழானில் ஈகைபுரியும் திருக்கரங்களில் இரண்டு
இன்று ஜிஹாத் ஆனாலும்....
நோன்புடனும் நிலத்திற்காய் கல்லெறிய
இக்கணமும் காத்துநிற்கின்றவர்களை
அடி ரெபேக்கா உன்னால் எதுவும் செய்யமுடியாது
மறைந்திருந்து சுடும் உன் துப்பாக்கி ரவைகளுந்தான்
மானங்கெட்டவை என்பதைத் தெரிந்துகொள்!

----------------------------

அமைதியை நேசிக்கின்ற பலஸ்தீனர்க்கு
இறைவா நிறைவான நிம்மதியைக் கொடு
இஸ்ரேலின் ஆட்டத்தை இந்த ரமழானோடு
இல்லாதொழித்திடு  எல்லாம் வல்லவனே!
இஸ்லாத்திற்காய் பலஸ்தீன மண்ணுக்காய்
இளமை ததும்பும் வயதிலும் தன்னுயிர் நீத்த
இனியதாதி ரஸான் அல் நஜ்ஜாருக்கு
இனிய சுவர்க்கம் நல்கிடு ரஹ்மானே...
இனிய சுவர்க்கம் நல்கிடு!

----------------------------
-மதுராப்புர,
கலைமகன் பைரூஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக