செவ்வாய், 5 ஜூன், 2018

இன்புளுவென்சா வைரஸ் தாக்கத்தினால் 3000 பேர் வதை பாதிப்பு!

இலங்கையின் தென் மாகாணத்தில் பரவிய வைரஸிற்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. இந்த வைரசினால் 3000 பேர் வரை பாதிக்கப்பட்டு இதுவரை சிகிச்சைப் பெற்றுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம், மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். பலியானவர்களில் அநேகர் குழந்தைகள் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக பரவி வந்த இந்த வைரஸ், அடையாளம் காணப்படாமல் இருந்தது ஆனால் தற்போது அது ’இன்புளுவென்சா - ஏ’ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

''வைரசின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. இந்த வைரசினால் பாதிக்கப்பட்ட 22 நோயாளர்கள் மட்டுமே கம்புறுபிட்டிய மருத்துவமனைக்கு புதிதாக வந்துள்ளனர். ஜூன் முதலாம் திகதி முதல் மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 10ஐ விட குறைந்துள்ளது. ’இன்புளுவென்சா - ஏ’ வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், வைரசைக் கட்டுப்படுத்தவும் 3 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.'' என்று கூறினார்.

இந்த வைரஸ் தாக்கத்திற்கு சிகிச்சைப் பெற்று பலர் வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் வீடு திரும்பினாலும், தொடர்ந்து 10 நாட்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தெற்கில் உள்ள இந்தப் பிரச்சினையை மூடிமறைக்கவும், பலியானோரின் உண்மையான எண்ணிக்கையை மறைக்கவும் அதிகாரிகள் முயற்சிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தெற்கில் இன்புளுவென்சா வைரஸ் பிரச்சினையை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிக்கிறதே தவிர உரிய தீர்வைக் கண்டு அதனைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

நோயின் தாக்கம் குறைந்திருந்தாலும், குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார், முதியோர் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த தெற்கில் உள்ள ஆரம்ப பாடசாலைகளும், முன்பள்ளிகளும் கடந்த மே மாத இறுதியில், ஒருவார காலம் மூடப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக