வெள்ளி, 11 மே, 2018

அமைச்சர் ஹக்கீமின் உரை கவலை தருகிறது!

- வை எல் எஸ் ஹமீட்
ஜனாதிபதியின் 8ம் திகதி பாராளுமன்ற கொள்கை விளக்க உரையின் விவாதத்தில் அமைச்சர் ஹக்கீமின் உரை மிகவும் கவலை தரக்கூடியதாகவும் அரசியல் விரக்தி நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் இருந்தது.


அவருடைய பேச்சின் பிரதான அம்சமாக “ ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஒரு நழுவல் போக்கினைக் கொண்டிருந்ததாகவும் ஒரு உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை;” என்றும் குறைபட்டுக்கொண்டார்.

உண்மையில் என்று ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நோர்வேயுடன் தொடர்பு ஏற்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை சிறிதும் சடைவில்லாது, தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதில் தமிழ்த் தலைவர்களைவிட அதீத அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றார்.

முஸ்லிம்களுக்கு எத்தனையோ துன்பியல் சம்பவம் நடந்தபோதெல்லாம் ஜனாதிபதியையோ பிரதமரையோ நேரடியாக நொந்துகொள்வதற்கு தயங்குகின்றவர் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதில் ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை; என்று நேரடியாகவே ஜனாதிபதியைச் சாடுகின்றார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பாக நிறைய நான் எழுதியிருக்கின்றேன்; எழுதிக்கொண்டிருக்கின்றேன். தமிழர்களும் ஆளும் சமூகமாக மாறுவதற்காக முஸ்லிம்களை அடிமைச் சமூகமாக மாற்ற இவ்வளவு அக்கறை எடுக்கின்றாரே. இதையும் வரவேற்பதற்கு சில சகோதரர்கள் இருக்கின்றார்களே! இதனை அவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது? என்று நினைக்கும்போது உண்மையில் சில நேரங்களில் நான் விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்படுகின்றேன்.

இந்த சமூகத்திடம் நான் மிகவும் மன்றாட்டமாக வேண்டுவது ஹக்கீமை ஒரு பொது இடத்திற்கு அழைத்து இந்த அதிகாரப் பகிர்வில் உள்ள முஸ்லிம்களுக்கான நன்மைகளை கூறச்சொல்லுங்கள். நன்மையில்லாவிட்டால் பறவாயில்லை. தீமையில்லை; என்பதையாவது நிறுவச்சொல்லுங்கள். முஸ்லிம்களுக்குத் தீமையான ஒன்றில் இவர் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கின்றார்.

கடந்த ஒரு வருடத்திற்குமுன் அவரை ஒரு தடவை நான் சந்தித்தபோது அவரிடம் கேட்டேன், “ அதிகாரம் பிராந்தியங்களுக்குத்தானே வழங்கப்படுகிறது;”என்று. “ ஆம்” என்றார். அதன்பின் கேட்டேன், “முஸ்லிம்கள் ஏதாவது ஒரு மாகாணத்தில் ஆளக்கூடிய சமூகமாக இருக்கிறார்களா?” என்று. இல்லை; என்றார். அப்படியானால் முஸ்லிம்கள் ஒரு அரசாங்கத்தால் ஆளப்பட்டால் போதாதென்று ஒன்பது அரசாங்கங்களால் ஆளப்பட வேண்டுமா? எனக்கேட்டேன். இன்றைய இனவாத சூழ்நிலையில் அதன் தாக்கத்தைப்பற்றி யோசித்தீர்களா? எனக்கேட்டேன்.உங்களுக்கு வாக்களித்த கண்டி மக்களுக்கே துரோகம் செய்கிறீர்களே!” என்றேன்.

சிறிதுநேரம் யோசித்துவிட்டு “இப்பொழுதும் சிங்களவரால்தான் ஆளப்படுகின்றோம். அப்பொழுதும் சிங்களவர்களால்தான் ஆளப்படுவோம். என்ன வித்தியாசம்” எனக்கேட்டார். “இதுதான் உங்கள் புரிதலென்றால் இதை ஆறுதலாகத்தான் பேசவேண்டும். இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்;” என்று கூறிவிட்டு வந்தேன். அதன்பின் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இதுதான் அவர் நிலைப்பாடு. ஒன்றை அவர் நினைத்தால் அல்லது தீர்மானித்தால் ஆயிரம்
உயர்பீடம் கூடினாலும் அத்தனைபேரும் எதிர்த்தாலும் அதுதான் முடிவு. அவருடைய கட்சி அரசியலில் அவர் எதையாவது செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் சமுதாயத்தின் இருப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் ஒரு தனிமனிதனின் தவறான முடிவு சமூகத்தின் முடிவாகமாறி சமுதாயம் இருளில் தள்ளப்பட்டுவிடக் கூடாதே!

ஏன் தனிமனிதன் எனக்கூறுகின்றேனென்றால் அங்கு இன்னுமொரு பெருந்தலைவர் இருக்கின்றார். இந்த விடயத்தில் இவர் சொல்வதுதான் அவரது நிலைப்பாடும். அது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும்.

இதில் இன்னும் கவலையான விடயம் என்னவென்றால் “ அரசியலமைப்பில் உள்வாங்கவேண்டிய பல விடயங்களில் வழிகாட்டல் குழு உடன்பட்டிருப்பதையும் குறிப்பிடுகின்றார். அதாவது இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களைக் குறிப்பிடுகின்றார். அந்த விடயங்களை நடைமுறைப்படுத்த அரசு அக்கறை காட்டவில்லை; என்றும் குறைபட்டுக்கொள்கின்றார்.

இடைக்கால அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்களெல்லாம் முஸ்லிம்களுக்குப் பாதகமானவை. அவைகளையெல்லாம் இவரும் சேர்ந்து உடன்பாடு கண்டவையாக கூறுகின்றார்; அமுல்படுத்தச் சொல்கின்றார். இதை எங்கே போய்ச்சொல்லி அழுவது?

தோப்பூர் பத்து வீட்டுத்திட்டம்
—————————————-
தோப்பூர் பத்துவீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு நிரந்தர ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடுகின்றார். இதை பாராளுமன்றில் பேசியது தவறெனக் கூறவில்லை. ஆனால் மறைமுக முட்டுக் கொடுக்கின்ற த தே கூட்டமைப்பு, ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளையெல்லாம் மீட்கும்போது உங்களால் வெறும் தோப்பூர் காணியை மட்டுமாவது மீட்க முடியாத பலயீனத்தில் இருக்கிறீர்கள்; என்பதை எப்போது புரிந்துகொள்வீர்கள்?

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல காணிப்பிரச்சினைபற்றிக் குறிப்பிட்டார். நல்ல விசயம்; வரவேற்கின்றோம். ஜனாதிபதி 85% காணிகளை விடுவித்திருப்பதாக தெரிவுத்ததைக் குறிப்பிட்டு அந்த 85% என்ற கணக்கு சரியானதா? என்பதிலும் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி, மற்றும் ஹக்கீம் இருவரது நிலைப்பாடும் சரியாக இருக்கலாம். ஒன்றுக்கொன்று முரண்பாடான இரு நிலைப்பாடுகளும் எவ்வாறு சரியாக இருக்கலாம்? என்ற நியாயமான கேள்வி இதை வாசிப்பவர் மனங்களில் எழலாம்.

ஜனாதிபதி தமிழர்களின் கையகப்படுத்தப்பட்ட காணிகளை மனதில் வைத்து 85% என்று கூறியிருக்கலாம். அதேநேரம் முஸ்லிம்களின் கையகப்படுத்தப்பட்ட அல்லது தடைவிதிக்கப்பட்ட காணிகளையும் சேர்த்துக் கணக்குப்பார்த்து ஜனாதிபதி கூறிய 85% விகித கணக்கை ஹக்கீம் பிழை கண்டிருக்கலாம். எனவே இருவரும் சரியான கூற்றையே கூறியிருக்கலாம். அவ்வாறாயின் முஸ்லிம்களின் காணிகள் விடுவிப்பது ஒரு புறம் இருக்க, அந்தக் காணிகளை கணக்கில் எடுப்பதற்கே ஜனாபதி தயாரில்லை; என்பதையே அது காட்டுகின்றது.

த தே கூட்டமைப்பு, எதுவித பதவியும் பெறாமல் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரு மறைமுக ஆதரவை அரசுக்கு வழங்கிக்கொண்டு அவர்களின் காணிகளில் 85% விகிதத்தையே விடுவிக்கும்போது அரசுக்கு நேரடி முட்டுக்கொடுத்துக்கொண்டு 1% கூட முஸ்லீம்களின் காணிகளை விடுவிக்க முடியாமல் இருக்கும் கையாலாகத்தனத்தை இந்தப் பாராளுமன்ற உரை அழகாக கோடிட்டுக் காட்டியிருக்கின்றது.

இதை ஹக்கீம் பேசியதால் ஹக்கீம் மட்டும் இந்தக் கையாலாகாத் தனத்திற்கு பொறுப்பல்ல. ஹக்கீம் ஒன்றும் செய்யவில்லை. தானே சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றேன் என்று அடிக்கடி விதவிதமாக பீடிகை போடுகின்றவரும் பொறுப்புதான்; என்பதையும் நாம் நினைவிற் கொள்ளவேண்டும். அவர் இழந்த காணியைப் பெறுவதற்குப்பதிலாக மேலும் ஒரு லட்சம் ஏக்கரைப் பறிகொடுத்துவிட்டு, முஸ்லிம்களுக்காக போராடும் தீரன் எனத் தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொள்வார்.

இதுதான் இன்றைய முஸ்லிம்களின் துர்ப்பாக்கியநிலை. இத்தனைக்கும் சாதித்தது அமைச்சுக்கள். ஒருவரிடம் அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சு. மூன்றரை வருடங்களாக அபிவிருத்தியை ஊடகங்களில்தான் காணுகின்றோம். கல்முனையை துபாயாக காணுகின்றோம். சம்மாந்துறையை பஹ்ரைனாக காணுகின்றோம். ஆனால் வருடாந்தம் அமைச்சின் நிதி செலவழிக்கப் படாமல் திரும்பிப்போன கதைதான் கேள்விப்படுகின்றோம்.

அடுத்தவரின் அமைச்சிற்கு அபிவிருத்தி என்பது என்னவென்றே தெரியாது. அபிவிருத்திக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. நிதி தேவையுமில்லை. ஊடகத்தில் அபிவிருத்தி செய்வதற்கு நிதி எதற்கு? அப்படியானால் அந்த அமைச்சு எதற்காக என்று கேட்டு மூக்கில் கைவைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அன்புள்ள சகோதரர்களே, இன்று முஸ்லிம் அரசியல் ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது.

உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் எந்த சூதாட்ட அரசியலை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அல்லாஹ்வுக்காக முஸ்லிம்களின் எதிர்கால இருப்பை, அவர்களது பாதுகாப்பை மாத்திரம் காவுகொடுக்கத் துணியாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக