ஞாயிறு, 6 மே, 2018

காலி மாநக சபையில் தமிழுக்காக போராடிய றிஹானா மஹ்ருப்பின் கன்னிப் பேட்டிஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாநகர சபைக்குத் தெரிவாகியுள்ள றிஹானா மஹ்ரூப் 15௦ வருடகால பழமை மிகு காலி மாநகர சபையில் தமிழிலும் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புக் கோரி கன்னி அமர்விலேயே நடத்திய போராட்டம் காரணமாக இப்போது காலி மாநகரசபை அமர்வுகளில் தமிழும் ஒலிக்கிறது.


காலி மாநகர சபையின் இரண்டாவது முஸ்லிம் பெண் உறுப்பினர் இவரே. இதற்கு முன் ஹாஜரா சாலி என்ற பெண் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
திருமதி றிஹானா அளித்த பேட்டி
நீங்கள் அரசியலில் களமிறங்குவதற்கு தூண்டுகோலாக அமைந்தது?
அப்படி பெரிதாக ஒன்றுமில்லை. கட்சிக்காரர்கள் என்னை அணுகி எனது பெயரை வேட்பாளர் பட்டில்யலில் சேர்த்துக்கொள்ள சம்மதம் கேட்டபோது பெற்றோரினதும், எனது சகோதர்களினதும் சம்மதத்தோடு ஆம் என்று பதில் சொன்னேன்.
உங்கள் கட்சி?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் மரச்சின்னத்தில் போட்டியிடவில்லையே?
ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டது.
ஐக்கிய தேசியக்கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெற்றிருந்தும் மாநகரசபை அதிகாரம் கை நழுவி விட்டதே. அதற்கென்ன கரணம்?
மேயர் நீயா? நானா? என்ற போராட்டம். வேறு எதுவும் கூறுவதற்கில்லை.
உங்கள் கல்வித் தகைமை?
காலி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தமிழ்மொழியில் கற்று சாதாரண தரத்தில் திறமையாகச் சித்தியடைந்த எனக்கு உயர்கல்வியைத் தொடர பல தடைகள் ஏற்பட்டதனால் கல்வியைத் தொடர முடியவில்லை.
நீங்கள் சில அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் மொழி உரிமையை சாட்டாக வைத்து சபையை குழப்ப முயற்சிப்பதாக சிலர் (உறுப்பினர்கள்) கூறுகின்றனரே?
அபாண்டம். முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் என்ன குழந்தையா? அடுத்தவரின் பாட்டுக்கு தாளம்போட,  எனக்கு தமிழ் மொழியில் பாடவும் தெரியும், சபையை வெளிப்படுத்தவே உரிமைக்குரல் எழுப்பினேன். இது பிழையா?
தமிழ் மொழி அமுலாக்கலுக்கு தொடந்தும் குரல் கொடுப்பீர்களா? அல்லது சபையில் மூத்த அரசியல்வாதிகளின் மட்டம் தட்டல்களுக்குப் பயந்து நகர சபைக்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்வீர்களா?
இல்லை, இல்லை தமிழ் மொழி அமுலாக்கல் முழு நாட்டிலும் சீராக அமுலாகும் வரை தொடர்வேன்.
நீங்களே… மாநகர சபை வரலாற்றில் இரண்டாவது பெண் உறுப்பினர். சரித்திரம் படைப்பதற்கா, சாதனை நிலை நாட்டுவதற்கா தமிழ் மொழிப் போராட்டம்?
இல்லை. இது உரிமைப் போராட்டம். வெறுமனே வாய்மூடி, கைகட்டி கொடுப்பதை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்வது எனது குறிக்கோளல்ல. என்னை நம்பியவர்களுக்கு என்னால் எதாவது நடக்குமாயின் அது எனக்கு நிம்மதி.
நீங்கள் சார்ந்துள்ள கட்சி அதாவது முஸ்லிம் காங்கிரஸ் தெளிவான கொள்கையின்றி அந்தப்பக்கம் இந்தப் பக்கம் குனிவதும் நிமிர்வதும்….?
மேலோட்டத்தில் அப்படித் தென்பட்டாலும் சமூகத்தின் விடிவுக்கே தலைமை எடுக்கும் சரியான முடிவே அது. போகப் போகப் புரியும்.
தமிழ் மொழிக்காகக் குரல் கொடுக்கும் போது பெரும்பான்மை சமூகம் உங்களை வெறுப்புணர்வோடு பார்ப்பார்கள் என்று எனக்கொரு சந்தேகம் தோன்றுகிறது?
இல்லை அப்படியில்லை. உரிய முறையில் மொழி அமூலாக்கல் நடைபெறாததே சமூகங்களுக்கிடையிலான விரிசலுக்குக் கரணம் என்பதை அவர்களும் புரிந்துவைத்துள்ளர்கள்.
இறுதியாக முஸ்லிம் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை சிங்கள பாடசாலைகளில் சேர்பதற்கும், முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள சிங்களப் பிரிவில் சேர்பதற்குமே போட்டி போடுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து?
முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் என்பதை அறியாதவர்களும், புரியாதவர்களும் சிங்கள மொழியில் படித்தால் தான் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம். ஆனால், தொழில் புரியும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை எடுத்து ஆய்வு செய்தால் உண்மை புரியும்.
முஸ்லிம் சமூகத்திடம் எனது அன்பான வேண்டுகோள் தாய்மொழி தமிழ் என்பதை மறந்து விடாதீர்கள். ஏனைய மொழிகளையும் கற்கத் தவறாதீர்கள்.

ஏ.ஸீ.எம். ஜிப்ரி

நன்றி நவமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக