புதன், 25 ஏப்ரல், 2018

சண்முகா ஹபாயாச் சர்ச்சை :நடந்தது என்ன?

திரு/சண்முகா இந்துக் கல்லூரி ஒரு தேசிய பாடசாலை.இங்கு மொத்தமாக 8 முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள்.அவர்களுள் ஐவர் பெண்கள்.பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன்.சென்ற ஏப்ரல் 2ம் திகதியோடு ஓய்வுக்கு செல்லவேண்டியவர் நீடிப்பில் பாடசாலையில் இருக்கிறார்.

2012ல் இப்பாடசாலைக்கு முதன் முதலாக றாஷிதா என்னும் முஸ்லிம் ஆசிரியை கற்பிக்க வந்திருந்தார். தான் பாடசாலைக்கு ஹபாயா அணிந்து வரவேண்டும் என்று அதிபர் திருமதி ஜெயபாலனிடம்
அனுமதி கோரியிருந்தார்.இந்தப் பாடசாலையில் ஹபாயா அணிந்துவர முடியாது என்ற கண்டிப்பான உத்தரவு அவருக்குப் போடப்பட்டதைத் தொடர்ந்து புடைவை அணிந்து கொண்டுதான் அவர் பாடசாலைக்குச் சென்றிருக்கிறார்.இப்பொழுது மாற்றலாகி வேறுபாடசாலைக்குச் சென்றுவிட்டார்.

2013ல் பௌமிதா ஆசிரியை சண்முகா கல்லூரிக்கு நியமனம் கிடைத்துச் சென்றிருக்கின்றார்.ஹபாயா அணிந்து வருவதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள். அனுமதி வழங்கப்பட்டவில்லை. பாடசாலையின் அதிபர் அதே பல்லவியைப் பாடியிருக்கிறார். விரும்பினால் இடமாற்றம் தரப்படும் செல்கிறீர்களா என்று வினவப்பட்டது. தொடந்து மாகாணசபைப் பணிப்பாளரிடம் ஆசிரியை பௌமிதா முறைப்பாடு செய்திருந்தார்.எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.ஒரு மாதகாலப் போராட்டம் பலனில்லாமல் போனதன் பின்னர்ஆனால் அவர் இந்தப் பாடாசாலையிலேயே புடைவை அணிந்து கொண்டு செல்கிறார்கள்.

2014ல் சஜானா ஆசிரியை அந்தப்பாடசாலைக்குச் சென்றிருக்கிறார்.அவர் அந்தப் பாடசாலையின் பழைய மாணவியும் கூட.ஹபாயா அணிவதற்கான அனுமதி அவருக்கும் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் புடைவை அணிந்து வந்திருக்கிறார்.

2016ல் ஷிபானா என்னும் ஆசிரியை சண்முகா இந்துக் கல்லூரிக்கு நியமனம் பெற்றுச் சென்றார்.ஹபாயா அணிவதற்கான் அனுமதியை பாடசாலை அதிபரிடம் கேட்டிருக்கிறார்.அதே மறுப்பு.புடைவை அணிந்து கொண்டு செல்கிறார்.

2018 ஜனவரியில் திருமதி கபீர் அவர்கள் மாற்றலாகி கல்லூரிக்கு வந்திருந்தார்.என்ன நடந்தாலும் தான் ஹபாயா அணிந்து கொண்டுதான் வருவேன்.நிர்வாகம் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும் என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.இரண்டாம் தவணைப் பரீட்சை முடியும் வரைக்கும் திருமதி கபீர் ஹபாயா அணிந்து கொண்டுதான் பாடசாலைக்குச் செல்வார்.
சென்ற திங்கட்கிழமை ரெஜினா என்னும் இன்னொரு முஸ்லிம் ஆசிரியையும் பாடசாலைக்கு புது நியமனம் பெற்று வரவிருந்தார்.

இந்த நிலையில் இரண்டாம் தவணை விடுமுறைக்காக பாடசாலை மூடப்பட்டிருந்தது. எமது உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று எல்லா முஸ்லீம் ஆசிரியைகளும் இரண்டாம் தவணைக்காக பாடசாலை செல்லும் போது தாம் அனைவரும் ஹபாயா அணிந்து செல்வதாக தீர்மானம் எடுத்திருந்தனர்.

ஒரு மரியாதைக்கான பாடசாலை அதிபரிடம் இதனை எத்திவைப்பதற்காக சென்ற ஞ்சாயிற்றுக்கிழமை (22) மாலை ஆறு மணியளவில் ஆசிரியைகளான பௌமிதா,சஜானா,ஷிபானா அவர்களுக்குத் துணையாக ஆசிரியை பௌமிதாவின் கணவர்,சுஜானாவின் கணவர் ஆகியோர் பாடசாலை விடுதியில் அதிபரைச் சந்திக்கச் சென்றனர்.அதிபர் அலுவலகத்தில் இருந்ததால் அலுவலகத்தில் அதிபரைச் சந்தித்து தாங்கள் பாடசாலைக்கு ஹாபாயா அணிந்து வரப்போவதாகக் கூறியிருக்கின்றனர்.

‘’நீங்கள் நினைத்த மாதிரி வரமுடியாது.எமக்கென்று ஒரு தனிக்கலாச்சாரம் இருக்கிறது.அந்தக் கலாச்சாரத்தைப் பேணவேண்டும் என்று அதிபர் பேசியிருக்கிறார்.

‘’ஆசிரியர் ஒழுக்கக் கோவையில் சீரான ஆடை அணிந்து வரவேண்டும் என்றுதான் இருக்கிறது.எமது கலாச்சார ஆடையை அணியிம் உரிமை எமக்கு இருக்கிறது.பாடசாலைக்குள் புடையைவும் அதற்கு வெளியே ஹபாயும் அணிவது எங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ என்று முஸ்லிம் ஆசிரியைகள் கூறியிருக்கிறார்கள்.

‘கதைவைப் பூட்டிவிட்டு வெளியே போங்கள்.பின் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகுங்கள்.விரும்பிய முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்று படிப்பியுங்கள்.எங்கள் பாடசாலைக்கு ஏன் வருகிறீர்கள்’’ என்று அதிபர் திருமதி ஜெயபாலன் சொல்லியிருக்கிறார்.

இது நடந்தது ஞ்சாயிறு மாலை.
அதிபருக்கும் ஆசிரியைகளுக்குமிடையே நடந்த உரையாடல் ‘ஈழன் சுதன்’ எனப்படும் எல்லாள அமைப்பைச் சேர்ந்த ஒரு முகனூலில் அன்றிரவே வெளிவந்தது.அதிபருக்கு மாத்திரம் தெரிந்த ஒரு செய்தி எப்படி அந்த முகனூலில் வந்தது என்பதுதான் கேள்வி.

சென்ற திங்கட்கிழமை(23) அனைத்து முஸ்லிம் ஆசிரியைகளும் ஹபாயாவோடு பாடசாலைக்குச் சென்றபோது பாடசாலை நிர்வாகக் குழுவினரால் அழைக்கப்பட்டார்கள்.

பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன்,பிரதி அதிபர் பாலசிங்கம்,உதவி அதிபர் மாலினி கின்னப்பிள்ளை,உதவி அதிபர் வசந்த குமார் மற்றும் சண்முகா விடுதியின் பொறுப்பாளர் ஆகியோருக்கும் ஐந்து ஆசிரியைகளுக்குமிடையில் கூட்டம் நடந்தது.

உங்கள் இறுதி முடிவு என்ன என்று கேட்கப்பட்டது.நாங்கள் ஹபாயா அணிந்துதான் வருவோம் என்று ஆசிரியைகள் உறுதியாகக் கூறினார்கள்.’அப்படியானால் எமது சமூகம் ஆர்ப்பாட்டம் செய்து பயமுறுத்தினால் நாம் அதற்குப் பொறுப்பல்ல.அதற்கு நீங்கள் முகம் கொடுக்கத் தயாரா?’ என்று அதிபரும் பிரதியதிபரும் வினவினார்கள்.

ஆர்ப்பாட்டம் ஒன்றை முகம்கொடுக்கத் தயாரா என்ற அதிபர்களின் கேள்வியும் அதைத் தொடர்ந்து வந்த ஆர்ப்பாட்டமும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கூட்டம் நடந்து ஒரு மணி நேரத்தின் பின்னர் நடந்த சம்பவங்கள் ஈழன் சுதன் என்ற பக்கத்தில் வெளிவந்திருந்தது.

திங்கள் பாடசாலை முடியும் தறுவாயில் பல இந்து ஆசிரியைகள் நாளை பாடசாலைக்கு புடைவை அணிந்து கொண்டு வரவேண்டும் என்று நச்சரித்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை(24) மிஸ்டர் சாம் என்று அழைக்கப்படும் பொருளியல் பாட ஆசிரியர் மோகன்ராஜுக்கும் 5 ஆசிரியைகளுக்குமிடையில் ஒரு கூட்டம் பாடசாலையின் சம்மந்தர் மண்பத்தில் நடந்தது.இந்த விடயத்தில் விட்டுக் கொடுக்குமாறு மிஸ்டர் சாம் ஆசிரியைகளை வேண்டியிருந்தார்.ஆசிரியைகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மிஸ்டர் சாமோடு பேசிவிட்டு ஆசிரியைகள் வெளியே வரும் புகைப்படம் எல்லாளர் அமைப்பின் பக்கத்தில் வெளியாகியிருந்தது.

அதே நேரம் பாடசாலை முடிந்து செல்லும் போது சஜானா ஆசிரியையை வீதியில் நின்ற சிலர் கெட்ட வார்த்தைகளாலும், துவேஷ வார்த்தைகளாலும் திட்டி தாக்க முன்வந்திருந்தனர்.
அதைத் தொடந்து பல அனாமேதைய  முகனூல் பக்கங்களில் 
நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதில் பல எல்லாளன் அமைப்போடு தொடர்புபட்ட முகனூல் பக்கங்கள்.

ஆர்ப்பாட்டம் சில இனவாதக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதற்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் கருத்துக்கள் காணப்படுகின்றன.

நேற்று புதன்கிழமை(25) ஆசிரியைகள் ஹபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றிருந்தனர்.ஆசிரியை பௌமிதாவை நோக்கி ஆசிரியை திருமதி பேரானந்தம் ‘உன்னால்தானடி பாடசாலைக்கு இத்தனை அவமானம்'' என்று கையை நீட்டி மிரட்டியிருந்தார்.

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளை வலயக் கல்விப் பணிப்பாளர்,திட்டமிடல் பணிப்பாளர்,உதவி மாகாணப் பணிப்பாளர், கோட்டக்கல்விப்பணிப்பாளர், ஒரு மொழிபெயர்ப்பாளர், ஒரு சிங்கள உத்தியோகத்தர்,அதிபர் திருமதி ஜெயபாலன் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையில் கூட்டம் ஒன்று நடந்தது.ஆசிரியைகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள்.ஒரு முடிவை எட்டாமலே கூட்டம் முடிவடைந்தது.

அதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை(26) மதத்தலைவர்கள்,வலயக்கல்வி அதிகாரிகள்,பொலீஸ் உத்தியோகத்தர்கள்,பாடசாலை நிர்வாகம் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையிலான கூட்டம் இன்று 10 மணிக்கு நடக்கவிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் ஒரு சுமுமகமான முடிவு வராவிடில் அல்லது ஆசிரியைகளின் உரிமைகள் மறுக்கப்படுமானால் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நாம் நகர வேண்டும்.

கலாச்சார ஆடை இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை.அத்தோடு பாடசாலை ஒழுக்கக் கோவை இதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை.சண்முகா இந்துக் கல்லூரி இந்த விடயத்தில் வெற்றி பெற்றால் இது அனைத்து பாடசாலைகளிலும் அரங்கேறும். இதனை தடுத்து நிறுத்துவது எம் அனைவரினதும் கடமை.

குரலற்ற ஆசிரியைகளுக்கு நாம் குரல் கொடுப்போம்.

Raazi Muhammadh Jaabir

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக