மேற்கத்தேய மருத்துவ முறைமைக்கு ஏற்ப மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரையொன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவ விஞ்ஞானக் கலாநிதி சந்திக்கா விஜேரத்ன இன்று (15) ஸ்ரீலங்கா மருத்துவச் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டார்.
உணவுகளுடன் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய மாத்திரை பற்றிய சந்தேகம் சமூக வலைத்தளங்களில் பரவிவருவதால், அதுபற்றிய உண்மைத்தன்மையை சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவது எமது கடமையாகும் என்பதால் விஞ்ஞான ரீதியில் இதுவரை இவ்வாறான மருந்து மாத்திரையொன்று கண்டுபிடிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், மருந்து வில்லை, மருந்துத் தூள், ஊசியேற்றம் மூலம் எந்தவொரு கூட்டத்தினரினதும், இனத்தினதும் பெருக்கத்தை குறைப்பதென்பது எந்தவகையில் சாத்தியப்படாத ஒரு செயலாகும் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது பாவனையிலுள்ள அனைத்து குடும்பக்கட்டுப்பாட்டுக்கான மாத்திரைகளும், ஊசிமருந்துகளும் பெண்கள் மட்டுமே பாவிக்கும் தன்மையுடையனவாக இருக்கின்றன. அவற்றின் மூலம் தற்காலிகமான கருக்கட்டல் தடைசெய்யப்படுவது மட்டுமே நிகழ்கின்றது. ஆண்களை மலடாக்கும் தன்மையுடைய எந்தவொரு மாத்திரையும் உலகின் எந்தவொரு மூலையிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கலாநிதி சந்திக்கா விஜேரத்ன தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிப்பதற்காக வைத்தியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
(கேஎப்)