திங்கள், 12 மார்ச், 2018

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சதக்கத்துல்லா மௌலவிக்கு நியாயம் கிடைக்குமா?

முக்கியமான உலமாக்களில் ஒருவர் கண்டி ஸதக்கத்துல்லா மௌலவி. இவர் தெல்தோட்டையைப் பிறப்பிடமாகவும்,  ஹீரஸ்ஸகலயை வசிப்பிடமாகவும் கொணடவர். அக்குறணையில் நடைபெற்ற வன்செயல்கள் நடைபெற்று, இரண்டு நாட்களின் பின்னர் அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை ஏதோவொரு பொருளை வாங்குவதற்காக அக்குறணைக்குச்  சென்றுள்ளார்.

அவர் பொருளை வாங்கிக் கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் அம்பத்தன்னேயில் வைத்து காடையர்கள் சிலரால் தாக்கப்பட்டிருக்கிறார்.
இரத்தம் சிந்திய நிலையில் கடும் காயங்களுடன் தான் பயணித்த பஸ்வண்டியிலேயே அவர் வந்து, லைன் பள்ளி என்ற இடத்தில் இறங்கியிருக்கின்றார். அவர் ஏற்கனவே லைன் பள்ளி என்ற இடத்தில் அவருக்கு நன்கு வேண்டப்பட்டவரான ஜெலாலுத்தீன் ஹஸ்ரத் என்பவரை அவர் தேடியிருக்கிறார்.  அவரைச் சந்திக்கவியலாமல் மீண்டும் டொரிங்டன் என்ற இடத்திற்கு வந்திருக்கிறார். அவ்விடத்தில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட ஸதக்கத்துல்லா மௌலவியை வாலிபர்கள் சிலர் கண்டு, நொந்துபோய்  காரணம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் எவ்விதப் பதிலும் சொல்லாமல் புத்திசுவாதீனமற்றவர் போல் சென்றிருக்கிறார்.

அவரிடம் பலவாறு வாலிபர்கள் வினாக்கள் தொடுத்தபோதும், பொலிஸிற்குச் செல்வதற்கு அழைத்த போதும் அவர் பொலிஸ் நிலையத்திற்குச் செல்லவில்லை. பிறகு அவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் யாரேனும் ஒருவர் கடுங்காயங்களுடன் விசாரணைகளின்றி அனுமதிக்கப்படமாட்டார்கள். என்றாலும், தற்போது நினைவிழந்தவராக பல நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இயந்திரங்களின் உதவியுடன்தான் தற்போது ஸதக்கத்துல்லா மௌலவி இருந்துகொண்டிருக்கிறார்.

ஸதக்கத்துல்லா மௌலவி அவர்கள் ஏற்கனவே கண்டி சில்வஸ்டர் கல்லூரியின் இஸ்லாம் பாட ஆசிரியராக சேவையாற்றியவர். சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் பல சங்கங்களில் தலைவராகவும், செயலாளராகவும் செயற்பட்டவர். மேலும் இஸ்லாமிய காதிநீதிபதியாகவும்  முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும் செயற்பட்டவர். எல்லாவற்றிலும் மேலாக இவர் கண்டி ஜம்இய்யத்தில் உலமாவின் உபதலைவர்களில் ஒருவராகவும் செயற்பட்டவர்.

நாட்டில் ஆங்காங்கே நடைபெறும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை சார்ந்த மாநாடுகள், கூட்டங்களில் கலந்துகொண்டு சீரிய கருத்துக்களை வழங்கிவந்தவர். ஏனைய மதத் தலைவர்களுடனும், பிறமதத்தவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவர்.

என்றாலும், இன்று இனவாத  தீய சக்திகளினால் நையப்புடையப்பட்டு, யாரும் பேசாத ஒருவராக கண்டி வைத்தியசாலையில் மௌலவியவர்கள் இருக்கின்றார்கள். அரசியல்வாதிகளோ, சமூக ஆர்வலர்களோ இவர் விடயம் தொடர்பில் ஏதும் அறியாதவர்கள் போல் மௌனித்து இருப்பது விசனத்திற்குரியது.

ஏனைய மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர் ஒருவருக்கு  இவ்வாறானதொரு விடயம் நடைபெற்றிருந்தால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அழிவுகள் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சாதாரண மாஉருண்டையை வைத்தே பள்ளிவாசல் எரிக்கப்பட்டது. காடையர்கள் முஸ்லிம்களின் வியாபார நிலையங்களையும், உடைமைகளையும் தீக்கிரையாக்கியிருக்கிறார்கள்.

சிங்களச் சகோதர் ஒருவர் முஸ்லிம் பெயர்தாங்கி வாலிபர்கள் சிலரால் கொலைசெய்யப்பட்டார் என்ற பேரில், எத்தனையெத்தனை அழிவுகள்... எத்தனையெத்தனை இஸ்லாமிய வழிபாட்டுத்தளங்களில் அழித்தொழிப்புக்கள்...

இன ஐக்கியத்திற்காக பல்லாற்றானும் சேவைசெய்த, ஸதக்கத்துல்லா மௌலவியின் தற்போதைய கவலைக்கிடமான நிலைக்குக் காரணமான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் இனிமேல் இவ்வாறான சிங்கள இனத்திற்கே சேறுபூசுகின்ற அடாவடித்தனச் செயல்களைச் செய்யாதிருக்க பாடம் புகட்டப்பட வேண்டும். அதற்கு பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பெரும்பாலானோரின் வேணவாவாகும்.

(கலைமகன் பைரூஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக