சனி, 3 பிப்ரவரி, 2018

இனவாதியான தயாகமகேயுடன் தேனிலவு!


தயாகமகேவை  மு.காங்கிரசுடன் முடிச்சுபோடுவது ஏன் ?  

சமூகவளைத்தள மற்றும் ஊடக பலத்தின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது ஒவ்வொரு காலகட்டத்துக்கும் வெவ்வேறு வகையான வசைபாடல்களை மேற்கொண்டு அவர்மீது இருக்கின்ற மக்கள் ஆதரவினை இல்லாமல் செய்வதற்கு பலவித தந்திரோபாயங்களை சிலர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
அந்தவகையில் அண்மையில் மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரம்தான் அமைச்சர் தயாகமகே என்ற சிங்கள இனவாதியுடன் முஸ்லிம் காங்கிரசை முடிச்சு போட முற்படுவதாகும்.  


முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாகவும், அதன் அதிகார மைய்யமாகவும் அம்பாறை மாவட்டம் காணப்படுவதனால், இம்மாவட்டத்தில் தான் நினைத்தது போன்று அமைச்சர் தயாகமகே அவர்களால் அதிகாரம் செலுத்த முடிவதில்லை.
அதனால் தயாகமகே அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், அதன் தலைவருடனும் அடிக்கடி முறன்பட்டுக்கொண்டு பனிப்போரில் ஈடுபட்டு வருவதனை ஊடகங்கள் மூலமாக அறிகின்றோம்.  

அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இருக்கின்ற அரச நிறுவங்களை சிங்கள பிரதேசங்களுக்கு நகர்த்தியது தொடக்கம் மாணிக்கமடு பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டது வரைக்குமான அனைத்து இனவாத செயல்பாடுகளின் பின்னணியில் அமைச்சர் தயாகமகே இருக்கின்றார்.

இவ்வாறான இனவாதியைத்தான் கிழக்குமாகான முதலமைச்சர் பதவியில் அமர்த்துவதற்கு கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் கடுமையான முயற்சியினை மேற்கொண்டிருந்தார்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் நசீர் அஹ்மத் அவர்களை முதலமைச்சர் பதவிக்கு மு.கா பிரேரித்தனால் தயாகமகே என்ற சிங்கள இனவாதியை முதலமைச்சர் பதவியில் அமர்த்தும் விடயத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தோல்வியடைந்தார்.

இங்கே வேடிக்கை என்னவென்றால் தயாகமகேயுடன் தேனிலவு கொண்டாடுகின்றவர்கள் அப்பாவியாக வேடம் போட்டுக்கொண்டு முஸ்லிம் காங்கிரசுடன் அவரை தொடர்புபடுத்தி பிரச்சாரம் மேற்கொள்வதானது மக்களை முட்டாள்கள் என்று நினைத்து முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முற்படுவதனை காட்டுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.தே கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அவர்கள் மு. காங்கிரசின் அழைப்பில் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்தபோது, அதே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராகவும், கட்சியின் அமைச்சராகவும், தேசிய அமைப்பாளராகவும் பதவி வகிக்கின்ற தயாகமகேவை இனவாதி என்பதனால் அழைக்கவில்லை.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களுக்கு பிரதமருடன் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் உற்ற நண்பரான தயாகமகேவும் அழைக்கப்பட்டிருந்தார்.

இதிலிருந்து, யார் இனவாதிகளுடன் தேனிலவு கொண்டாடிக்கொண்டு தங்களது அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காக அவர்களது இனவாத செயல்பாடுகளுக்கு பின்னணியில் இருக்கின்றார்கள் என்றும், யார் இனவாதிகளை எதிர்த்து செயல்படுகின்றார்கள் என்றும் ஊகித்துக்கொள்வது மக்களுக்கு அவ்வளவு கடினமான விடயமல்ல.

- முஹம்மத் இக்பால்

சாய்ந்தமருது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக