புதன், 14 பிப்ரவரி, 2018

போராளிகளே நில்லுங்கள்!! (கவிதை)

போராளிகளே 
நில்லுங்கள் !
கொள்கைச்சூரியன்
தீப்பற்றி எரிகையில்
காணாமல் போனது
உங்கள் கண்கள்தானே??
பதவிக்கந்தலுக்காய்
சமூகத்தை நிர்வாணமாக்கிய
நீங்களா போராடப்போகிறீர்கள் ?
இலைகளை பிடுங்குவதாய்
உங்களுக்குள் நடந்த போரில்
அறுந்தல்லவா போயிற்று
எம் சுதந்திர வேர்..!

உங்கள் பேராசை
எங்கள் உணர்வுகளைத் தின்றது
உங்கள் பதவி மோகம்
எங்கள் உரிமைகளைத் தின்றது
உங்கள் பகட்டு வேஷம்
எங்கள் நிம்மதியைத் தின்றது
இன்னுமென்ன வேண்டும் தின்பதற்கு??
துகள் துகளாய் சிதிலமாகிப்போனது
நீங்கள் மட்டுமா ?
எங்கள் போராட்டமும்தானே..
உங்கள் பணப்பசிக்கு
எங்கள் இரைப்பையை
களவாடாதீர்கள்..
சாம்பலாகிப்போன பின்னே
தீயணைப்பு தேவையில்லை
ஓரத்தில் நின்றுகொண்டு
ஓய்வெடுக்க நேரமுண்டு
நீங்கள் போராடுவதாய்
பொய் சொல்வது
எல்லோருக்கும் புரிந்துவிட்டது..
போராளிகளே
நில்லுங்கள் !
தயவுசெய்து நில்லுங்கள்..!

- ஷிப்லி அஹமட்
நிந்தவூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக