வெள்ளி, 19 ஜனவரி, 2018

வடக்கு - கிழக்கு ஒன்றிணைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்! ரிஷாத் பதியுத்தீன்

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஒருபோதும் வடக்கு கிழக்கை ஒன்றிணைக்க இடமளிக்க மாட்டேன் என்றும் அனைத்துச் சதிகளுக்கு எதிராகவும் தான் எழுந்து நிற்பதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில், இம்முறை உள்ளுராட்சித் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய தேசிய முன்னணியின் அலுவலகத்தைத் திறந்து
வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மக்கள் எங்களுக்குப் பெற்றுத் தரும் ஆதரவிற்காக, நாங்கள் ஒருபோதும் மக்களின் பாதுகாப்பிற்காக, ஒருபோதும் வடக்கு  - கிழக்கை ஒன்றிணைக்க இடமளிக்க மாட்டோம். அந்த சதிகளுக்கு எதிராக நாங்கள் எழுந்து நிற்போம்... பயங்கரவாதத் தலைவன் அன்று சிங்கள - முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும்  துரத்தியடித்தான். வடக்கிலிருந்து எல்லோரையும் வெளியேற்றினான். பல வருடங்களாக மக்கள் துன்பத்தில் சிக்கி அல்லலுற்றார்கள். 20 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் அங்கு மீண்டும் நிலைகொள்வதற்காகச் செல்கின்றபோது, தெற்கிலுள்ள ஒரு சில குழுக்கள் இன்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் இம்முறை தேர்தலில் நாங்கள் பாடம் கற்றுக் கொடுப்போம்.

பிரதமரைப் போலவே ஜனாதிபதியும் எங்களுக்கு நம்பிக்கையாக ஒப்படைத்துள்ள கடமைகளை நாங்கள் சரிவரச் செய்துள்ளோம். அன்று நட்டத்தில் இயங்கிய நிறுவனங்களை நாங்கள் இலாபம் பெறும் நிறுவனங்களாக மாற்றியுள்ளோம். எங்களைப் பற்றித் தப்புத் தப்பாய்ச் சொன்னவர்களுக்கு, இனவாதக் கருத்துக்களை கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு இந்தத் தேர்தலில் நாங்கள் யார் என்பதைக் காட்டுவோம். நாங்கள் சரியான வழியில்தான் சென்றோம். எங்களால் யாருக்கும் எந்தவொரு அநீதியும் இல்லை. யாருக்கும் அநீதியிழைக்கவும் இல்லை. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் அதனை நன்கு அறிவார்கள்” எனவும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

1 கருத்து: