திங்கள், 8 ஜனவரி, 2018

சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்:- ஓர் ஓப்பீட்டு ஆய்வு

பாகம் 1

வை எல் எஸ் ஹமீட்

இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் அரசியலின் பெயரால் மக்களை மாக்களாக பாவிக்கின்ற செயற்பாடுகள், மக்களை மடையர்களாக்கி வாக்குச் சேகரிக்க முற்படுகின்ற முயற்சிகளைத் தோல் உரிப்பதும் இந்த 21ம் நூற்றாண்டில் சிந்தனைத் தெளிவுகளின் அடிப்படையில் மக்களை முடிவெடுக்கத் தூண்டுவதுமாகும். அதாவது இக்கட்டுரைத் தொடர் மக்களின் உணர்வுகளுடன் பேச முற்படவில்லை மாறாக அவர்களின் பகுத்தறிவுடன் பேச முற்படுகிறது.
இரண்டு வகை அணிகள்
---------------------------------------------
இத்தேர்தலில் முஸ்லிம் அரசியலில் இருவகை அணிகள் போட்டியிடுகின்றன. (1) முஸ்லிம் காங்கிரஸ்
(2) முஸ்லிம் காங்கிரசிற்கு எதிரான அணிகள். இந்த அணியின் பிரதான விமர்சன இலக்கு மு கா வாகும்.  இன்னும் சொல்லப்போனால் இன்று சமூக வலைத்தளங்களை மு கா விற்கு எதிரான விமர்சனங்களே ஆட்கொண்டிருக்கின்றன; என்றால் அது மிகையாகாது. 

மு கா பிழையான பாதையில் செல்கின்றது; என்பதைச் சொல்லித்தான் இந்த கட்சிகள் உருவாகின. இந்தக் கட்சிகள் இதுவரை அரசியல் செய்தன. இந்தக்கட்சிகள் உருவாகி தற்போது சுமார் ஒன்றரைத் தசாப்தங்கள் கழிந்துவிட்டன. இந்நிலையில் இன்னும் மு கா வின் பிழைகளைக்கூறியே இவர்கள் அரசியல் செய்வது சரியா? அல்லது, இவர்கள் இந்தக் காலப்பகுதியில் மு கா விற்கு மாற்றமாக தாம் சாதித்தவற்றை பட்டியலிட்டு மக்கள்முன் சமர்ப்பித்து அரசியல் செய்வது சரியா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, ( ஏனெனில் மு கா பிழை செய்யாவிட்டால் இவர்களது அரசியல் பூச்சியமா? என்ற கேள்வி இதிலிருந்து பிறக்கின்றது; என்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்) இந்த விமர்சனங்கள் நியாயமானவையா? என்பதை இக்கட்டுரை முதல் கட்டமாக ஆய விளைகிறது.

மு கா விற்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்
----------------------------------------------------------------------------------------------------------------
1) அபிவிருத்தியில் பிற்போக்கான நிலை
------------------------------------------------------------------------
கடந்த 17 ஆண்டுகளாக மு கா குறிப்பிடத்தக்க அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை; என்கின்ற ஒரு பலமான குற்றச்சாட்டு இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை இந்தக் குற்றச்சாட்டு நியாயமானதொன்றாகும். ( இதற்கு மாற்றமாக அவ்வாறு அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தால் அவற்றை மு கா தரப்பினர் பட்டியலிட்டு மக்களுக்கு வெளிப்படுத்தலாம்.)

2001ம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டுவரையான காலப்பகுதி மு கா விற்கு பொற்காலமாகும். ரணிலின் ஆட்சியை அரியணையேற்றி அதில் பலமான பங்குதாரராக இருந்த காலம். ஆனாலும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மு கா மிகவும் பாரமுகமாக இருந்தது; என்பது உண்மையாகும். அன்று அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருந்தால் இன்றும் அவை மு கா வின் சாதனையாக நினைவு கூரப்பட்டிருக்கும்.

2004 ம் ரணிலுடன் சேர்ந்து மு கா எதிர்க்கட்சியில் அமர்ந்தது. ( இது ஒரு பிழையான நிலைப்பாடு, என்பதை பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியிருக்கின்றேன்). அவ்வாறு எதிர்க்கட்சியில் அமர்ந்ததன் காரணமாக பல அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பத்தை அக்கட்சி இழந்தது.

அதனைத் தொடர்ந்து, 18 வது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதற்காக மஹிந்த அரசில் இணைந்தது. ஆனால் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை, நீதி அமைச்சின்கீழ் சிலருக்கு தொழில் வழங்கியதைத் தவிர. அதேநேரம் ஹக்கீமிற்கு வழங்கப்பட்ட  நீதி அமைச்சு ஒரு அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சல்ல என்பதும் மஹிந்த அரசில் ஹக்கீம் ஒரு நம்பிக்கையற்ற சந்தேகப்பிராணியாகப் பார்க்கப்பட்டதும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு தடையாக அமைந்தது; என்பதும் மறுப்பதற்கில்லை. மறுபுறம்  அபிவிருத்திக்கான ஒரு சாதக சூழ்நிலை இருந்திருந்தால்கூட ஹக்கீம் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பாரா? என்ற ஒரு கேள்வி அவரது 2001-2004 காலப்பகுதியில் அவரது செயற்பாட்டை நோக்கும்போது எழுவது தவிர்க்கப்பட முடியாதது.

இந்தக் குற்றச்சாட்டை ஹக்கீமிற்கு மட்டும் மட்டுப்படுத்த முடியுமா?
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் குற்றச்சாட்டின் பிரதான பங்கு ஹக்கீமிற்குரியதாயினும் அக்கட்சியின் ஏனைய ராஜாங்க, பிரதி அமைச்சர்கள், பா உறுப்பினர்கள் தமக்கு பங்கு இல்லை; என்று தப்பித்துக்கொள்ள முடியாது. இதற்கு ராஜாங்க அமைச்சராக, பிரதி அமைச்சராக இருந்த அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமோ அல்லது பிரதி அமைச்சராக, ராஜாங்க அமைச்சராக, முழு அமைச்சராக இருந்த அதன் முன்னாள் தவிசாளரோ விதிவிலக்கில்லை; என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்முனையின் அவலநிலை
--------------------------------------------------
கல்முனை மாநகரம் முஸ்லிம்களின் தலைநகரம்; என பெருமைப்படுகின்றோம். இன்று இவர்களெல்லாம் தனித்துவ அரசியல் செய்வதற்கு வித்திட்ட மறைந்த தலைவரின் தாயகம்; என விளிக்கின்றோம். ஆனால் கல்முனையில் பிறந்த அல்லது அதன்மீது பாசம் வைத்த ஒவ்வொருவனும் அந்நகரத்தில் கால் வைக்கும்போது ஓர் இனம்புரியாத சோகம் அவனை ஆட்கொள்கிறது. கல்முனை சோபையிழந்து தசாப்தங்கள் தாண்டிவிட்டன. அதனை அலங்கரித்து அழகுபார்க்கும் சக்தி அங்குள்ள மக்களின் வாக்குகளுக்கு இதுவரை இருக்கவில்லை.

ஒட்டிய வயிறும் பசியால் ஒடிந்துபோன உடலும் கல்நெஞ்சனையும் கரைய வைக்கும் ததும்பிய கண்களுடனான ஆபிரிக்க சிறுவர்களின் இரைஞ்சும் ஏக்கப்பார்வையை கல்முனைக்கன்னியும் பல ஆண்டுகளாக ஏந்தியிருந்தும் கண்டுகொள்ளாத அரசியல் காதலர்களின் அசமந்தப்போக்கு இன்று எல்லோரினதும் பேசுபொருளாக மாறியிருக்கின்றது.

எட்டடுக்கு மாளிகையாக பாராளுமன்ற சாயலைக்கொண்ட உள்ளக அவையுடன் கூடிய ஒரு மாநகரசபை வளாகத்தை மறைந்த தலைவர் கனவு கண்டார். அக்கனவு இன்றுவரை நிராசை. அன்று A R மன்சூர் அன்றைய காலத்திற்குப் பொருத்தமான நவீன சந்தையைக் கட்டித் தந்தார். இன்று அதன் அவலநிலை........? வந்த பணங்களும் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பேரூந்து தரிப்பிட நிலையம் .....?  இவ்வாறு குறைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. எனவே, கேட்கின்றார்கள்; இன்னொரு தடவை இம்மாநகரகசபையை எதற்காக உங்களிடம் தரவேண்டும்; இன்னும் ஐந்து வருடங்கள் கல்முனையின் தலைவிதியோடு விளையாடவா? என்று; கேள்வி பிழையென்று கூறமுடியுமா? கேள்வியில் நியாயமில்லை; என்றுதான் புறக்கணிக்க முடியுமா? ( கேள்வியைக் கேட்பவர்கள் யார்? என்ற கேள்விக்குள் தற்போது நான் வரவில்லை)

ஹக்கீமின்மீது மஹிந்தவுக்கு சந்தேகப்பார்வை இருந்தாலும் ஹக்கீமின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்லுறவையே கொண்டிருந்தார்கள். பசில் ராஜபக்‌ஷ யுத்த நிறைவையடுத்து வட- கிழக்கில்  பணத்தை வாரி இறைத்தார். அதில் கல்முனையை நனைக்கத் தெரியாமல்போன கையாலாகத்தனத்தை என்னவென்பது? ஆகக்குறைந்தது சுனாமியில் சுனாமியாக வந்து கொட்டிய NGO க்களின் நிதியைக்கூட பயன்படுத்தத்தெரியவில்லையே! எனவே, கல்முனை மக்கள் தங்கள் கடந்தகாலத் தவறுகளுக்கு பிரயச்சித்தம் செய்யவேண்டுமென்ற ஒரு கோசம் இன்று ஒலித்துக்கொண்டிருக்கின்றது. பிராயச்சித்தம் செய்வதில் தவறில்லை, மட்டுமல்ல அவசியமானதும்கூட, அது பிராயச்சித்தமாக இருந்தால்!

மைத்திரி ஆட்சியின் கீழ் அபிவிருத்தி
------------------------------------------------------------------------
மைத்திரி அரசங்கம் மூன்று ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அதில் பலமான அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சராகவே ரவுப் ஹக்கீம் இருக்கின்றார். பல நூறு மில்லியன் ரூபாக்கள் பல பல திட்டங்களுக்கு ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் கண்ணுக்கு புலப்படக்கூடிய குறிப்பிடத்தக்க அபிவிருத்தி இன்னும் தெரியவில்லை. ( இதற்கு மாற்றமாக அவ்வாறு செய்யப்பட்ட அபிவிருத்திகள் இருந்தால் மு கா தரப்பினர் அவற்றினை பட்டியலிட்டு மக்களுக்குத் தெரிவிக்கலாம்)

இந்நிலையில் அபிவிருத்தி அரங்கில் மு கா ஒரு சொத்திப்பிள்ளையாக இதுவரை செயற்பட்டது; இன்று அதற்கு எதிரான ஒரு தளத்தை உருவாக்க வித்திட்டிருக்கின்றது; என்பது மட்டுமல்ல சொந்த முதலீடு இல்லாத எதிரணியினருக்கு முதலீடாகவும் மாறியிருக்கின்றது. இங்குதான் பொதுமக்கள் தங்கள் உணர்ச்சிகளை புறம்தள்ளி பகுத்தறிவுக்கு வேலை கொடுக்கவேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.

( தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக