சனி, 27 ஜனவரி, 2018

ஸல்மான் எச்சில் படுத்திய தேசியப்பட்டியலை சுவைக்கப்போகும் அட்டாளைச்சேனை மக்கள்!

ஒருவர் எம்மோடு என்ன நோக்கத்துக்காக பழகுகின்றார் என்பதை அறிந்து, நாம் அவரோடு பழகுவது மிக முக்கியமானது. அந்த வகையில் அமைச்சர் ஹக்கீம் என்ன நோக்கத்துக்காக தேசியப்பட்டியலை வழங்கியுள்ளார் என்பதை அட்டாளைச்சேனை மக்கள் நன்கு சிந்தித்துக்கொள்ள வேண்டும்.
இது தேர்தல் அண்மித்த ஒரு காலப்பகுதியாகும். இந்த தேசியப்பட்டியலை தேர்தலின் ஆரம்ப காலப்பகுதியிலாவது வழங்கியிருக்கலாம். அவ்வாறல்லாது
அமைச்சர் ஹக்கீம் தேர்தலின்இறுதிக்காலப்பகுதியில் வழங்கியுள்ளதானது, தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனை மக்களுக்கு வழங்காமல் இருக்கும் வகையில் காய் நகர்த்தப்பட்டுள்ளது. அவரது காய் நகர்த்தல்கள் அனைத்தும் பிழைத்துப் போக வேறு வழியின்றி அட்டாளைச்சேனைக்கு வழங்கியுள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மு.காவின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி கட்சி மாறியதை தொடர்ந்து, இத் தேசியப்பட்டியலை அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனை மக்களுக்கு வழங்குவதில் வெளிரங்கத்தில் கூட எந்தவித சிறு தடையும் இருக்கவில்லை. அவர் கட்சி மாறி வருடமொன்று முடிவடையப்போகின்ற நிலையிலேயே அது வழங்கப்பட்டுள்ளது. (இதன் மூலம் அட்டாளைச்சேனை மக்களுக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் இருந்ததன் காரணம் ஹசனலியல்ல என்பதும் தெளிவாகிறது.) ஏன் இதுவரை காலமும் வழங்கவில்லை என்ற வினாவை எழுப்பினால், அவருக்கு அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கும் சிந்தனை இருக்கவில்லை என்பதை இன்னும் அறிந்துகொள்ளச் செய்யும்.
மு.கா வழங்கிய தேசியப்பட்டியலை பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் வாகன கோட்டா உட்பட பல விடயங்களில் மிக அழகாக ருசித்து, எச்சில்படுத்தி விட்டு, அட்டாளைச்சேனை மக்களிடம் வீசி எறிந்துள்ளார். உண்மையில் அட்டாளைச்சேனை மக்கள் தன்மானம் உள்ளவர்களாக இருந்தால், அதனை தூக்கி அமைச்சர் ஹக்கீமின் முகத்தில் வீச வேண்டும். இந்த தேசியப்பட்டியலானது அவர்களுக்கு புண்ணியத்துக்கு வழங்கும் ஒன்றல்ல. அந்த மக்களின் அபரிதமான ஆதரவினால் தான், அம்பாறை மாவட்டத்தில் மு.காவானது தனது உறுப்புருமைய தக்க வைத்துக் கொள்கிறது. இது அதற்கான கைமாறாகும்.
இது இந்த தேர்தலில் மாத்திரம் அந்த மக்கள் அளித்த வாக்குக்கான கைமாறுமல்ல. மூன்று தசாப்தமாக அந்த மக்கள் அளித்து வரும் வாக்குக்கான கைமாறாகும். அதனை இப்படி எச்சில் படுத்தித் தான் கொடுக்க வேண்டுமா? அது மாத்திரமல்ல. இவர் இந்த தேசியப்பட்டியலை வேறு விதமான நோக்கங்களின்றி உளப்பூர்வமாக வழங்க வேண்டும். அமைச்சர் ஹக்கீம் இந்த தேசியப்பட்டியலை எதற்காக வழங்கினார் எனக் கேட்டால், சிறு பிள்ளையும் தேர்தலை நோக்காக கொண்டது என கூறும். மூன்று தசாப்த காலமாக வாக்களித்த மக்களுக்கு வேறு வழியின்றி, உளமாறவன்றித் தான் வழங்க வேண்டுமா? அதுவும் அமைச்சர் ஹக்கீம் சுயமாக சம்பாதித்த சொத்தில் இருந்து பங்கு கேட்பது போன்று கெஞ்சி கூத்தாடி.
தற்போது சபீக் ரஜாப்தீனின் பிரச்சினை, பஷீர் சேகுதாவூதின் வெளியீடுகளில் இருந்து மக்களை திசை திருப்பல், அமைச்சர் றிஷாதின் சவால், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தனித்து ஆட்சியமைக்க முடியாது போய் விடுமா என்ற பயம் போன்றவற்றுக்கு முகங்கொடுக்க இதைத் தவிர வேறு வழியில்லை. அட்டாளைச்சேனை மக்கள் உண்மையான நண்பனையும், சந்தர்ப்பத்துக்கு பயன்படுத்த நினைக்கும் நண்பனையும் அறிந்து, தங்களது செயற்பாடுகளை அமைத்து கொள்ள வேண்டும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக