செவ்வாய், 9 ஜனவரி, 2018

சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? மாற்றம் ஏற்படுமா?

அல்லாஹ்வின் நாட்டமின்றி எவராலும் பதவிகளை அடையவும் முடியாது, அதுபோல் தடுக்கவும் முடியாது. சூழ்ச்சிக்காரர்கள் தங்களது வக்கிர புத்தியின் மூலம் எவ்வளவுதான் சூழ்ச்சிகள் செய்தாலும் இறைவனின் நாட்டப்படி நடப்பவைகள் நடந்தே தீரும். இறுதியில் அழிந்துபோவது சூழ்ச்சிக்காரர்களே! 

சாய்ந்தமருதில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் என்றோ ஏற்பட்டிருக்க வேண்டியது. ஆனால் அது இன்று உள்ளூராட்சிமன்றம் என்ற வடிவத்தில் விஸ்பரூபம் எடுத்துள்ளது. இந்த பிரச்சினைகள் தானாக உருவானது என்பதனைவிட சில சாய்ந்தமருது உள்ளூர் முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டது என்பதுதான் யதார்த்தமாகும். 
தொண்ணூறு வீதத்துக்கும் அதிகமான சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களிக்கின்றார்கள். ஆனால் அதில் பத்து வீதமானவர்கள்கூட அதிகாரிகளாக இல்லை. தேர்தல் முடியும்வரைக்கும் பயன்படுத்தப்படுவார்கள். தேர்தல் முடிந்தவுடன் கைவிடப்படுவார்கள். 
பின்பு கட்சியின் மூலம் கிடைக்கின்ற தொழில்வாய்ப்புக்கள் உட்பட அனைத்து சலுகைகளையும் தாங்களும் தங்களது குடும்பத்தினர்கள் மட்டுமே அனுபவிக்கின்றார்கள்.  

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றத்தின் அவசியம் உக்கிரமடைந்தும், அதன் பாரதூரத்தை ஆரம்பத்திலேயே தலைமைக்கு இந்த பிரமுகர்கள் எடுத்துக் கூருவதைவிடுத்து அங்கே எதுவும் நடந்துவிடவில்லை என்ற ரீதியில் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததனையே காணக்கிடைத்தது. 
ஊடகங்களில் அறிக்கைகள் விடுவதனாலும், தீர்மானங்கள் நிறைவேற்றுவதனாலும் எதனையும் சாதிக்க முடியாது என்று பாமரமக்கள் அறிந்துள்ளதை சில உள்ளூர் அரசியல்வாதிகள் அறிந்திருக்கவில்லையா? 
செல்வாக்குகள் உள்ளவர்களோ, பணம் படைத்தவர்களோ அல்லது சிந்தனையாளர்களோ சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் அரசியலுள் இடம்பிடித்துவிட கூடாது என்பதிலும், மறுபுறம் கட்சியில் தங்களுக்கு சவாலாக இருக்கின்றவர்களை எவ்வாறு ஓரம் கட்டலாம் என்றும் இரவுபகலாக காய் நகர்த்துகின்றார்கள். 

அத்துடன் அடுத்தடுத்த உயர் பதவிகளை இலகுவான முறையில் எவ்வாறு அடைந்து கொள்ளலாம் என்று சிந்திப்பதில் உள்ளூர் அரசியல்வாதிகள் தங்களது காலத்தினை செலவழித்தார்களே தவிர, சாய்ந்தமருதுக்கான பொதுவிடயங்களில் கவனம் செலுத்தவில்லை. 
சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் எழுதப்படாத ஒரு சட்டம் உள்ளது. அதாவது எல்லோரும் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்குகளை மட்டுமே வழங்க வேண்டும். ஆனால் எந்த சந்தர்பத்திலும் பிரமுகர்களாகவோ, பதவிகளிலோ இருந்துவிடக்கூடாது என்பதுதான் அந்த சட்டமாகும். 

சாய்ந்தமருதில் எத்தனையோ இளைஞ்சர்களும், சுயநலமற்றவர்களும் முஸ்லிம் காங்கிரசை ஆதரிப்பதற்கும், அதனை வழி நடாத்துவதற்கும் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் அதற்கு தடையாக இருப்பவர்கள் அதிகாரிகளாகும். 

எனவே இவர்களது பதவிகள் களையப்பட்டு புதியவர்கள் உள்வாங்கப்படாத வரைக்கும் பாரியளவில் எந்த முன்னேற்றத்தினையும் எதிர்பார்க்க முடியாது. 

முஹம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக