ஞாயிறு, 14 ஜனவரி, 2018

ஜனாதிபதி மைத்திரியே நிதி மோசடிக்குப் பொறுப்புதாரி!

1978 ஆம்  ஆண்டிற்குப் பிறகு நாட்டின் பொறுப்புக்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கே உள்ளன என்பது சகல பாமர மகனுக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர் நாட்டு மக்களால் நேரடியாத் தெரிவுசெய்யப்படும் ஒருவராவார். அவருக்குரிய அதிகாரங்களைப் பற்றி கூறும்போது, ஒரு ஆணைப் பெண்ணாகவோ, ஒரு பெண்ணை ஆணாகவோ மட்டுமே மாற்ற முடியாது. மற்றப்படி அவர் எதையும்
செய்யலாம் என்று கூறுமளவுக்கு அவரிடம் அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன என்பது நாட்டிலுள்ள அனைவரும் அறிந்திருக்கும் ஒன்றுதான். 

அதேநேரம் பிரதமர் என்பவர், பாராளுமன்ற உறுப்பினர்களினதும், ஜனாதிபதியினதும் விருப்பத்தைப் பெற்றவராக இருப்பதனால், அவர் தன்னிச்சையாக ஜனாதிபதியை மீறி எந்தவிடயத்திலும் செயற்பட முடியாது என்பதுதான் கடந்த காலங்களில் நாம் அறிந்த விடயமாகும்.

ஜே.ஆர். அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும்போது, நாட்டில் எது நடந்தாலும் அவர்தான் அதற்கெல்லாம் பொறுப்பாளியாக ஆக்கப்பட்டார். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதிகளான ஆர். பிரேமதாஸ, சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ போன்றோர் ஜனாதிபதிகளாக இருந்தபோது, பிரதமர்கள் “டம்மி”களாகவே செயற்பட்டனர். ஆனால், நாட்டில் நடக்கும் நன்மை - தீமை அனைத்திற்கும் ஜனாதிபதியே பொறுப்புக்கூறும் நிலையிலும் இருந்தார். இதனை நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். 

ஆனால், 2015 ஆம் ஆண்டு, சகல மக்களினதும் ஆதரவோடு ஜனாதிபதியாக்கப்பட்ட மைத்ரி அவர்கள் பொம்மை ஜனாதிபதி போன்றும், பிரதமர் ரணில் அவர்கள்தான் நாட்டின் சகல அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி போன்றும் இருப்பதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. .இதன் காரணமாக நாட்டில் நடக்கும் நாட்டில் நடக்கும் நல்லது - கெட்டதிற்கு யாரைப் பொறுப்புக் கூறுவது என்று மக்களுக்கு குழப்பமாகவே இருந்து வருகின்றது.

இந்நிலையில்தான் மக்கள் வங்கியில் நடைபெற்றதாகக் கூறப்படும், பணமுறி ஏல விடயத்தில் பாரிய நிதி மோசடி நடந்ததாக , ஜனாதிபதி மைத்ரி அவர்களினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இன்றோ நேற்றோ நடந்த விடயமல்ல. பல நாட்களாகத் திட்டமிட்டு நடந்த மோசடியாகும். இந்த மோசடியை ஜனாதிபதியோ, பிரதமரோ அறியாதிருக்க வாய்ப்பில்லை. அவர்களுடைய அதிகாரங்களையும் மீறி அவர்களுக்கே தெரியாமல் இந்த ஊழல் நடந்திருக்குமாக இருந்தால், இவர்கள் ஜனாதிபதி என்பதிலும் பிரதமர் என்பதிலும் என்னதான் அர்த்தம் இருக்கிறது? என்ற கேள்வி எழும்பவும் வாய்ப்புள்ளது.

அதிலும் முக்கியமாக ஜனாதிபதிக்குத்தான் இதில் கூடிய பொறுப்பிருக்கிறது. முன்னைய காலங்களில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றால், அந்தப் பழிகளையெல்லாம்  ஜனாதிபதியாக இருந்தவறே ஏற்ற வரலாறு உள்ளது. ஆனால் இந்த மோசடியில் மட்டும் ஜனாதிபதி மைத்திரி ஒன்றும் தெரியாதவர் போல், நடந்து கொண்டது மட்டுமல்ல. ஆணைக்குழு அமைத்து அதன்மூலம்தான் உண்மையைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு, அவருடைய நிலைமை இருக்கிறது என்றால்,  இன்றைய ஜனாதிபதியின் நடவடிக்கைகளை இதற்கு முன் பதவி வகித்த ஜனாதிபதிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, இன்றைய ஜனாதிபதியின் செயற்பாடுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை என்பதே மக்களின் கருத்தாகும். 

இருந்தாலும் விசாரணையின் பின், மோசடியொன்று நடைபெற்றுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த மோசடிக்குரிய முழுப் பொறுப்பையும், சகல அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் ஜனாதிபதி என்ற வகையில், ஜனாதிபதி மைத்ரி அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அதுதான் நியாயும்கூட. ஏனென்றால், கடந்த காலங்களில் இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டால் அன்றைய ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதிதான் அதற்காக விமர்சிக்கப்படுவது மட்டுமல்ல... அவர்தான் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலையிலும் இருந்திருக்கிறார். 

அதற்கு உதாரணம்தான்... கடந்த ஆட்சியில் யார்யாரோ செய்த பிழைகளுக்கு எல்லாம் மஹிந்த என்ற தனிநபரே பாதிக்கப்பட்டார். காரணம், அவர்தான் சகல அதிகாரங்களும் பொருந்தியிருந்ததனாலாகும். அவருடைய ஆட்சியில் அநியாயம் நடந்ததாகக் கூறினாலும், அன்று அவரோடு இருந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் இன்றும் மு்ககிய பதவிகளில்தான் இருக்கின்றார்கள். ஏன் இன்றைய ஜனாதிபதி மைத்ரி அவர்களும்கூட அன்று அவரோடு இருந்தவர்தான். ஆனால் அன்றைய ஆட்சியில் நடந்த அநியாயம் உண்மையாகவிருந்தால், அதற்கு மஹிந்த மட்டும் காரணமல்ல. ஏனையோரும் காரணமாக இருந்திருப்பார்கள். ஆனால், ஒட்டுமொத்தக் குற்றவாளியாக்கப்பட்டவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டும்தான். சகல அதிகாரங்களும் உடைய ஜனாதிபதியாக அவர் இருந்ததே அதற்குக் காரணமாகும். 

ஆனால், இன்றைய ஜனாதிபதி மைத்ரி அவர்கள் இது சம்பந்தமாக விமர்சிக்கப்படுவதற்குப் பதிலாக ஊழலைக் கண்டுபிடித்த உத்தமர் என்று இன்றைய ஆட்சியாளர்களால் போற்றப்படுகின்றார். இது எந்த அளவு நியாயமாகும் என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்வதாக தெரியவில்லை. தனது அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தில் நல்லது நடந்தால் ஜனாதிபதிதான் அதற்குக் காரணம் என்று உரிமை கோருபவர்கள், நாட்டிலே நடந்த பாரிய நிதி மோசடிக்கும் ஜனாதிபதி பொறுப்பல்ல என்று இந்த ஆட்சியாளர்களினால் காண்பிக்க முனைவது ஏற்றுக் கொள்ளவியலாத ஒன்றாகும். 

ஆகவே, நாட்டு மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட, சகல அதிகாரங்களையும் கைவசம் வைத்துள்ள ஒரு ஜனாதிபதி ஆட்சியில் இருக்கும்போது, அவரது ஆட்சியில் நடக்கும் நல்லது - கெட்டதிற்கெல்லாம் அவர்தான் பொறுப்புக்கூற வேண்டும் என்பதே உண்மையாகும். 

அந்தவகையில், இந்த ஊழலைக் கவனிக்கத் தவறிய ஜனாதிபதி மைத்ரி அவர்கள் தனது தவறை ஒத்துக்கொண்டு, அதற்கான மக்கள் மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஒரு விடயமாகும். 


தொடரும்....

உபயம் - மடவளைச் செய்தி
http://www.madawalanews.com/2018/01/blog-post_32.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக