சனி, 27 ஜனவரி, 2018

திருமண வயது 18 - சரீஆ ரீதியான ஒரு பார்வை

கலீபா உமர்(றழி) அவர்களின் காலத்தில் ஒரு முறை பஞ்சம் ஏற்பட்டது.

அச்சூழ்நிலையில் கலீபா உமர் (றழி) அவர்கள் அன்று அமுலில் இருந்து ஷரீஆ சட்டமான களவெடுத்தால் கையை வெட்டும் சட்டத்தை தற்காலிகமாக இரத்து செய்தார்கள்.

சூழ்நிலையை கருதி, சமூக நலனை இலக்காக கொண்டு இவ்வாறான ஒரு புது வழிமுறையை கையாண்ட கலீபா உமர்(றழி) அவர்களை எவரும் பிழை காணவில்லை. இறுதித் தூதரின் காலத்தில் இப்படியானதொரு நடைமுறை இல்லமாலிருந்த போதும்.

ஷரீஆ சட்டம் என்பது மனிதகுலத்துக்கு நன்மையை மட்டுமே பயக்க கூடியது. ஷரீஆ சட்டம் சமூகநலனை அடிப்படையாக கொண்டது. ஷரீஆ சட்டம் மூலம் ஒரு போதும் மனிதகுலத்துக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. நாம் ஆனால் சூழ்நிலையை, நாம் வாழும் சமூகத்தின்  சமூகயதார்த்தங்களை கவனத்தில் கொள்ளாமல் எடுத்த எடுப்பில் ஷரீஆ சட்டங்களை அமுல்படுத்த முற்படும் போது மனிதகுலத்துக்கு தீங்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

உதாரணத்துக்கு நான் மேலே குறிப்பிட்ட கலீபா உமர்(றழி) அவர்களின் இஜ்திஹாத் சமூகநலனை அடிப்படையாக கொண்டதே. களவாடினால் கையை வெட்ட வேண்டும் என்ற அமுலில் இருந்த  ஷரீஅ சட்டத்தை கலீபா அவர்கள் அப்பஞ்ச காலத்தின் போது அன்றைய சமூக சூழலை, சமூகயதார்த்தத்தை கவனத்தில் கொள்ளாமல் நடைமுறைபடுத்தி இருந்தால்.

பல அப்பாவிகள் கூட இதனால் பாதிக்கப்படலாம், அவர்களுக்கு அநீதி நிகழலாம் என்ற காரணத்துக்காகதான் கலீபா உமர்(றழி) அவர்கள் அன்று அமுலில் இருந்த  கைவெட்டுதல் என்ற ஷரீஅ சட்டத்தை பஞ்சகாலத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

சற்று விளக்கமாக சொன்னால் கைவெட்டுதல் என்ற இந்த ஷரீஆ சட்டம் முஆமலாத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு பகுதி. சமூகநலன் கருதி இந்த சட்டத்தில் மாற்றங்கள் செய்வது ஷரீஆவில் அனுமதிக்கப்பட்டது என்பதனையே கலீபா உமர்(றழி) அவர்களின் முன்மாதிரி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

விடயத்துக்கு வருவோம் இன்று இலங்கையில் பலராலும் கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட் டுள்ள முஸ்லிம்களின் சிறுவயது திருமணம் தொடர்பான விடயத்தையும் இப்படியான பின்னணியிலிருந்தே நாம் பார்க்க வேண்டும்.

திருமண விடயத்தில் குர்ஆன் திட்டவட்டமாக குறிப்பிட்டு இது தான் திருமண வயதெல்லை என எங்கும் குறிப்பிடவில்லை. அல்குர்ஆன்,சுன்னா பலவாறான சந்தர்ப்பங்களில் அதன் வசனங்களை திட்டவட்டமாக அமைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதன் வசனங்களை பல கருத்துக்களுக்கு இடம்பாடனதாக அமைத்துக்கொள்ளும். இப்படியான சந்தர்ப்பங்களில் சமூக நலனை, சமூகயதார்த்தத்தை அடிப்படையாக கொண்டு குர்ஆன் சுன்னாவுக்கு முரண் இல்லாத ஒரு தீர்வுக்கு வருவதே சிறந்தது.

உதாரணத்துக்கு இந்த குர்ஆன் வசனத்தை நோக்குவோம்.

6 وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىۤ اِذَا بَلَغُوا النِّكَاحَ‌ ۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَيْهِمْ اَمْوَالَهُمْ‌ۚ وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ يَّكْبَرُوْا‌ ؕ وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ‌ ۚ وَمَنْ كَانَ فَقِيْرًا فَلْيَاْكُلْ بِالْمَعْرُوْفِ‌ ؕ فَاِذَا دَفَعْتُمْ اِلَيْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَيْهِمْ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا‏

4:6. அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் – (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும்இ வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் – ஆனால்இ அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் – (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.

திருமணத்துக்கு வயது இருக்கிறது என்பதனை இக்குர்ஆன் வசனம் தெளிவாக சொன்ன போதும் திருமணத்துக்கான வயதினை தெளிவாக திட்டவட்டமாக சொல்லவில்லை. அதற்கான முக்கிய காரணம்தான் திருமண வயது தீர்மானிக்கப்பட வேண்டியது அக்கால சூழ்நிலை, சமூகயதார்த்தங்களை கவனத்தில் கொண்டு தான் என்பதனை நமக்கு தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

இன்றைய சமூக சூழலில் எல்லாவற்றுக்கு வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்ட, வாக்களிக்க, ஒரு பொறுப்பான அரச பதவியை, தொழிலை பெற இப்படி பொறுப்பு வாய்ந்த சமூகத்துடன் மக்களுடன் தொடர்புபடும் அனைத்துக்கும் சட்டரீதியான வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஏனெனில் நான் மேலே குறிப்பிட்ட உதாரணங்களில் சில அமானிதமானவை, பொறுப்பு வாய்ந்தவை இன்னும் சில அடுத்தவர்களின் உயிருடன் சம்பந்தப்பட்டவை. இந்த விடயங்களுக்கு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டிருப்பதனை எவரும் ஷரீஆவுக்கு முரணானதாகவோ, அல்லாஹ்வின் சட்டத்தில் கை வைப்பதாகவோ பார்ப்பதில்லை.

அதே போல் தான் திருமணம் என்பதும் நான் மேலே குறிப்பிட்ட உதாரணங்களைவிட பல மடங்கு சமூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. சமூகத்தின், இஸ்லாமிய வாழ்வியலின் அடிப்படையே, ஆரம்பமே திருமணத்தில் தான் ஆரம்பிக்கிறது.

எமது அடுத்த தலைமுறையை தீர்மானிக்கும் மிக முக்கியமான அடிப்படையான விடயம் இந்த திருமணம். சமூகநலன் கருதி,  சமூகயதார்த்த்தை கருத்தில் கொண்டு திருமணத்துக்கு பொருத்தமான வயதொன்றை நிர்ணயிப்பதில் எந்த தவறுமில்லை.

மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனம் தெளிவாக சொல்கிறது. அவர்களுக்கு தமது சொத்துக்களை தாமே பாராமரிக்க முடியுமானளவு இயலுமையை பெரும் வரை காத்திருக்குமாறு. உண்மையில் இந்த வயதை அதாவது பொறுப்பு வாய்ந்த வயது எத்தனை என்பதனை குறிப்பிட்ட கால சமூகத்தினரே தீர்மானிக்க வேண்டும். சமகாலத்தை பொறுத்தவரை பொதுவாக ஆண்களை பொறுத்தவரை முதிர்ச்சியுற்ற நிலை 20 ஆகவும் பெண்களை பொறுத்தவரை 18 ஆகவும் அமைய முடியும். (இது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்).

மேலும் நவீன காலத்தின் ஆரம்பப் பகுதியில் உஸ்மானிய சாம்ராஜ்யத்தில் குடும்ப சட்டங்கள் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு ஹிஜ்ரி 1336 முஹர்ரம் 02ஆம் திகதி ‘கானுன் ஹூகூக் அல் ஆயிலா என்ற பெயரில் தனியார் சட்டயாப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இந்த யாப்பில் திருமணவயது 18 என்ற ஷரத்து இடப்பட்டிருந்தது.

திருமண வயதுக்கு வரையரையிடுவது மார்க்கத்துக்கு முரணான ஒரு விடயம் அல்ல என்பதற்கு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இந்த யாப்பும் ஒரு முக்கிய, தெளிவான ஆதாரம்.

திருமண வயதெல்லையை சட்டரீதியாக  18 வயது என நிர்ணயிப்பதால்

நபிகளார் அன்னை ஆயிஷா அவர்களை சிறு வயதில் திருணம் முடித்தது தவறு என நிறுவப்படும் எனவும், இப்படி செய்வது சுன்னாவுக்கு முரணானது என்ற கருத்தும் சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது.

இப்படியான தவறான மனப்பதிவுகளுக்கும்

சில உதாரணங்கள் மூலம் நாம் சில தெளிவுகளை பெற முயற்சிப்போம்.

சர்வதேச சட்டங்களின்படி 18 வயதுக்கு குறைந்தவர்களை யுத்த நடவடிக்கைக்காக பயன்படுத்துவது சட்டவிரோதமான செயற்பாடு. இப்படி செய்வது தண்டனைக்குரிய குற்றம்.

பத்ருப் போரில் ஆபூஜஹ்லை கொலை செய்த சிறுவர்களான

முஹாத் பின் அம்ர் அல் ஜம்ஹ்க்கு வயது 14

அடுத்த சிறுவனான முஹவ்விஸ் பின் அப்ராவுக்கு வயது 13

இந்த ஹதீஸை வைத்து 13 வயதானவர்களுக்கும் யுத்தத்தில் கலந்துகொள்ள முடியும் அது நபிகளார் அனுமதித்த சுன்னா என்று யாரும் கூறுவதில்லை. இந்த சம்பவத்தையும் சமகால சர்வதேச யுத்த சட்டத்தையும் ஒப்பிட்டு, முஸ்லிம்கள் சிறுவர்களை போராளிகளாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இது சமகால சர்வதேச சட்டத்துக்கு முரணானது என்று யாரும் சொல்வதில்லை. அப்படி யாரும் சொல்வார்களானால் அறிவீனத்தின் காரணமாகத்தான் அப்படி சொல்வார்கள். ஏன் என்றால் அதற்கான காரணம் அவ்வாறான ஒப்பீடு எந்த வித்திலும் பொருத்தமற்ற ஒப்பீடு என்பது எல்லோருக்கும் தெரியும். இறுதித்தூதரின் காலத்தில், அந்தக் கால சமூக ஒழுங்கில், அந்த வயதில் யுத்தம் புரிவது அக்கால சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் இன்றைய சமூக ஒழுங்கு அக்கால ஒழுங்கைவிட முற்றிலும் மாற்றமானது.

நபியவர்களின் சுன்னாவையும், அந்தக் காலத்துக்கு மட்டுமேயுரிய சமூகயதார்த்தங்களையும் நம்மில் குழப்பிக்கொள்வதாலேயே இப்படியான அடிப்படையற்ற சந்தேகங்கள் நமக்கு எழுகிறது.

அந்த வகையில் அக்கால சிறுவர் திருமணத்தை அக்கால சமூகயதார்த்தமாக கொள்ளலாம்.

மேலும் இறைதூதர் அவர்களுக்கே மட்டுமேயுரிய விசேட சலுகையாகவும் அதனை பார்க்கலாம்.

இதனை இன்னும் சற்று விரிவாக விளங்கிக்கொள்ள இந்த சம்பவத்தை பார்ப்போம் நபியவர்களின் முன்னால் உடும்பு இறைச்சி கொண்டு வந்து வைக்கப்பட்ட போது நபியவர்கள் உடும்பு இறைச்சியை சாப்பிடவில்லை. நபியவர்களுடன் அமர்ந்திருந்த கலீத் இப்னு வலீத் அவர்கள் நபியவர்களை நோக்கி “அல்லாஹ்வின் தூதரே உடும்பு இறைச்சிய ஹராம் என்பதினாலா நீங்கள் இதனை சாப்பிடவில்லை” என வினவினார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள் “இது எமது பூமியில் இல்லாத ஒரு பிராணி இதனை சாப்பிடுவதில் எனக்கு விருப்பமில்லாமல் இருக்கிறது அதனால் சாப்பிடவில்லை” என நபியவர்கள் கூறியதும் காலித் இப்னு வலீத் அவர்கள் உடும்பு இறைச்சியை எடுத்து சாப்பிட்டார்.

ஸஹாபாக்கள் நபியவர்களை புரிந்துகொண்டுள்ள முறையை பாருங்கள். நபியவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்களை மற்றவர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை என்பதனை நன்றாக புரிந்து வைத்திருந்தனர்.

உடும்பு இறைச்சி நபியவர்களுக்கு முற்றிலும் புதியது என்பதனால் நபியவர்கள் அதனை சாப்பிடவில்லை. உடும்பு இறைச்சி சாப்பிட கூடாது என்பது அல்லாஹ்வின் புறத்தலிருந்து வந்த வஹீயா அல்லது நபியவர்களின் தனிப்பட்ட விருப்பமின்மையா என்பதனை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் தான் காலித் இப்னுவலீத் அவர்கள் உடும்பு இறைச்சியை சாப்பிட்டார்கள்.

நபியவர்கள் சிறுவயதுத் திருமணம் செய்தது கொண்ட விடயம் ஹதீஸில் நேரடிக் கட்டளையாகவோ அது ஒரு வரவேற்க்கத்தகுந்த, நபியவர்கள் செய்யுமாறு தூண்டி, ஊக்கமளித்த  செயல் எனவோ குர்ஆனிலோ, ஹதீஸிலோ எங்கும் வரவில்லை. ஆகவே நபியவர்களின் சிறுவர் வயது திருமணத்தை எல்லோருக்குமானதாக பொதுப்படுத்தாமல் நபியவர்களின் தனிப்பட்ட விடயமாக கருதி திருமணத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு வயதெல்லையை இடுவது ஷரீஅத்துக்கு, சுன்னாவுக்கு முரணானது என நாம் கருத வேண்டிய அவசியமில்லை.

மேற்கின் கட்டளைக்கு அடிபணிந்தே திருமண வயதுக்கு வரையறை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. உண்மையில் இது எந்த அடிப்படையும் இல்லாத ஒரு குற்றச்சாட்டு. ஏனெனில் இஸ்லாம் சாம்ராஜ்யமாக இருந்த உஸ்மானிய சாம்ராஜ்ய காலப்பிரிவிலேயே அன்றைய உஸ்மானிய சாம்ராஜ்ய சட்டயாப்பில் திருமண வயது 18 என வரையறுத்து குறிப்பிடப்பட்டிருந்ததனை ஆரம்பத்தில் பார்த்தோம்.

அது மட்டுமல்ல இலங்கை முஸ்லிம்களாகிய எங்களை பொறுத்தவரை இலங்கையில் நாம் சிறுபான்மையாக வாழ்ந்து வருகிறோம். எம்மை சுற்றி இருக்கும் 90 வீதமானோர் முஸ்லிமல்லாதவர்கள். சிறுவர் திருமணத்துக்கான அனுமதி என்பதனை நம்மை சுற்றி வாழும் எமது சகோதர இனத்தவர்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதனையும் நாம் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். இறுதித் தூதர் அவர்களும் அப்படித்தான் செயற்பட்டார்கள். அதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியை நபியவர்களின் வாழ்விலிருந்தே பார்ப்போம். இறுதித்தூதர் காலத்தில் நபியவர்களுக்கு பெரும் சவலாக பெரும் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியவர்கள் முனாபிக்குகள். முனாபிக்குகளை கொலை செய்ய நபியவர்களுக்கு தடை விதிக்கப்படவுமில்லை. இறுதித்தூதரை பார்த்து சிலர் “ஏன் நீங்கள் முனாபிக்குகளை கொலை செய்யவில்லை” என கேட்டதற்கு நபியர்கள் கீழ்வருமாறு பதிலளித்தார்.

‘முஹம்மத் அவரது தோழர்களை கொலை செய்கிறார் என மக்கள் பேசாதிருக்க வேண்டும்’

(ஸஹீஹ் புகாரி)

முனாபிக்குகளை கொலை செய்ய அனுமதியிருந்தும் நபியவர்கள் முனாபிக்குகளை  கொலை செய்யாததற்கு பிரதான காரணம் இஸ்லாம் பற்றிய, இறுதித்தூதர் பற்றிய தப்பபிப்ராயம் மக்கள் மத்தியில் ஏற்படக் கூடாது என்பது. அப்படி ஏற்பட்டால் அது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்.

இலங்கையில் நம்மை சுற்றிவாழும் பெரும்பாலான முஸ்லிமல்லாதவர்கள் சிறுவர் திருமணத்துக்கான அனுமதியினை மிகத் தவறாகவே நோக்குகின்றனர்.  அவர்களை நோக்கி  நாம்  இஸ்லாத்தை கொண்டு செல்லும் போது இவ்வாறான விடயங்கள் பெரும் முட்டுக்கட்டையாக நமக்கு அமைந்துவிடுகிறது. ஆகவே இந்த விடயத்தையும் நாம் கவனத்தில் கொண்டு இஸ்லாம் அனுமதித்த திருமணத்துக்கான வயதுக் கட்டுப்பாட்டை கொண்டு வருவது இலங்கை முஸ்லிம்களுக்கு பெரும் சாதகமான சூழலை கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.

அதனோடு இந்த விடயம் கருத்து முரண்பாட்டுக்குரிய மற்றும் முஆமலாத் உடன் தொடர்புடைய விடயம் என்பதால் மேலே குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் திருமணத்துக்கான வயதினை நமது சமூக சூழல், யதார்த்தங்களை கருத்தில் கொண்டு 18 வயதாக கொண்டு வருவது. ஷரீஅத்துக்கோ அல்லாஹ்வின் கட்டளைக்கோ மாற்றமானது அல்ல என்பதனை தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

திருமண வயதின் வரையறை 18வயது என நிர்ணயிக்கப்படுகிறது என்பதன் அர்த்தம். 18 வயதுக்கு கீழான எந்தப் பெண்ணும் திருமணம் முடிக்க கூடாது என்பதல்ல. 18 வயதுக்கு வயதிற்கு முன்னரே திருமணம் முடிக்க வேண்டிய அவசியமிருந்தால் காழியிடம் அதற்கான உரிய காரணத்தை சமர்ப்பித்து விசேட அனுமதியுடன் திருமணம் முடிக்கலாம்.

சில வீடுகள் வறுமை காரணமாக பெண்ணை கரை சேர்ப்பதற்காக சிறுவயதில் திருமணம் செய்து வைக்கிறார்கள். பெண்ணின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக, இப்படியான பெண்கள் இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தும் சமூகத்தில் நிலவி வருகிறது. உண்மையில் ஒரு வீட்டில், சமூகத்தில் வறுமை தாண்டவமாடுவதாக இருந்தால். அதற்கான தீர்வு திருமணமல்ல. அந்த வறுமையை நீக்க சமூகம் பாடுபட வேண்டும்.  அதனையே இஸ்லாம் தீர்வாக முன்வைக்கிறது. “ஏழைகளுக்கு உணவளிக்க (உதவ) தூண்டாதவனும் அநாதைகளுக்கு அநியாயம் செய்பவனும் இறுதிநாளை மறுப்பவர்கள்” என்று குர்ஆன் கூறுகிறது.

சமூகத்தில் இந்தளவுக்கு வறுமை பரவியிருக்கிறது என்றால் அதற்கான இஸ்லாம் சொல்லும் தீர்வு திருமணம் அல்ல. அந்த வறுமை நிலையை ஒழிக்க பாடுபடும் படி தான் இஸ்லாம் போதிக்கிறது. ஆகவே திருமணத்துக்கு வயதெல்லை நிர்ணயிகக கூடாது என்று கூற அது பொருத்தமான நியாயமான காரணம் அல்ல.

இவ்வாறான சமூக வறுமை பிரச்சினைகளை எப்படி அணுகுவது தீர்ப்பது என்பன தொடர்பில் இஸ்லாம் வேறு தெளிவான தீர்வுகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. அவற்றை தான் நாம் உயிர்பிக்க முயற்சிக்க வேண்டுமே தவிர சிறுவயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது அதற்கான இஸ்லாத்தின் தீர்வு அல்ல.

இன்னுமொரு சாராரின் கருத்து இன்றைய காலகட்டத்தில் சில சிறுமிகள் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பாமாகிறார்கள். இப்படியான சில சந்தர்ப்பங்களில் இந்த சட்டம் அவர்களுக்கு பாதகமாக அமையும், குறிப்பிட்ட பாதிக்கப்பட்டவர்கள் உரிய 18 வயது வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்கின்றனர். உண்மையில் இந்தக் காரணத்துக்காகத்தான் திருமணத்துக்கு வயதெல்லை நிர்ணயிப்பதனை வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றால். அது மாபெரும் தவறு. இஸ்லாத்தை பொறுத்தவரை திருமணத்துக்கு முன்னரும் சரி திருமணத்துக்கு பின்னரும் சரி எந்த சந்தர்ப்பத்திலும் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பதில்லை. இந்த காரணத்துக்காக நாம் திருமணவயதுக்கு வரையறை நியமிப்பதிலிருந்து நாம் தவிர்ந்துகொள்ளவதாக இருந்தால். விபச்சாரத்துக்கு மறைமுகமாக சட்ட அந்தஸ்து வழங்க, உதவியளிப்பது போல் ஆகிவிடும். உண்மையில் இப்படியான இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படியான தீர்வை நோக்கி செல்ல வேண்டும் என்று இஸ்லாத்தில் தனியான வழிகாட்டல்கள் உள்ளது. குறிப்பிட்ட அந்த தனியான வழிகாட்டல்களை நாம் பின்பற்றுவதே அப்படியான சந்தர்ப்பங்களில் சிறந்த தீர்வு.

ஒரு சிலர் கேட்பதுண்டு எவருக்காவது குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே திருமணத்துக்கான ஆசை, தேவை வந்தால் என்ன செய்வது என்று. உதாரணத்துக்கு ஒரு சாதரண 12 வயது சிறுவன் ஒரு பெரிய வியாபார இஸ்தாபனத்தில் காசாளராக விரும்புகிறான் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நாம் இடமளிப்போமா? நிச்சயமாக இல்லை. குறிப்பிட்ட சிறுவனுக்கு இது தொடர்பான அறிவு முதிர்ச்சி, அனுபவம் வந்ததன் பின் தான் அப்படியான இடத்துக்கு நாம் அவனை நியமிப்போம். அது போல் தான் திருமணமும். ஆசை வந்தது என்பதற்காக திருமணம் செய்து வைப்பதால் விபரீதங்கள் தான் அதிகரிக்கும். உதாரணமாக நான் மேலே குறிப்பிட்டது போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வயது இருக்கிறது.

பாடசாலை செல்ல ஒரு வயது இருக்கிறது,

மத்ரஸா செல்ல ஒரு வயது இருக்கிறது,

பல்கலைக்கழம் செல்ல ஒரு வயது இருக்கிறது,

தொழில் ஒன்றை பெறுவதென்றால் அதற்கும் வயது இருக்கிறது,

வாகனம் ஓட்டுதல், வாக்களித்தல் இன்னும் எல்லாவற்றுக்கு ஒரு வயதெல்லை இருக்கிறது.

ஒருவருக்கு ஆசை வந்தது என்பதற்காக அதனை செய்ய முடியாது. அதே போல் தான் திருமணமும் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஒரு சமூக உருவாகத்தின் பிரதான அடிப்படை அது தான். ஒரு சமூகம் சிறந்த சமூகமாவதும், ஒரு சமூகம் சீரழிந்து போவதனையும் திருமணம் தான் தீர்மானிக்கிறது. சமூகத்துக்கான அங்கத்தவர்களை திருமணம் தான் வழங்குகிறது. இந்த உலகத்தின் அடிப்படையே திருமணம் தான். திருமணம் என்ற கட்டமைப்பு சீராக ஒழுங்கான திட்டமிடலுடன் இல்லாவிட்டால் அது முழு உலகத்தையே சீரழித்துவிடும்.

ஆகவே திருமணம் என்றால் என்னவென்றே புரியாத வயதில் திருமணம் செய்து வைப்பது என்பது. நாமே நமது சமூகத்துக்கான அழிவை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு செயல். ஆகவே திருமணம் என்பது இருபாலாரும் வாழ்க்கை என்றால் என்ன? திருமணத்தின் முக்கியத்துவம் என்ன? இஸ்லாம் ஏன் திருமணத்தை கடமையாக்கியிருக்கிறது? போன்ற கேள்விகளுக்கான தெளிவுகளை பெறக்கூடிய வயதில் தான் நடாத்தி வைக்கப்பட வேண்டும்.

அப்போது தான் இஸ்லாம் கூறும் திருமணத்தின் இலக்கை நம்மால் அடைந்துகொள்ள முடியும். சமகாலத்தை பொறுத்தவரை அதற்கான வயது 18 பொருத்தமானது என்பது பெரும்பாலானோரின் கருத்து. உண்மையில் இந்த கருத்தை ஆய்வுக்குட்படுத்தி இந்த வயது பொருத்தமானதாக இருந்தால் இதனை திருமண வயதுக்கான எல்லையாக நிர்ணயிப்பது இலங்கை போன்ற சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் மக்களுக்கு மிகவும் பொருத்தமாக அமையும். இப்படி திருமணத்துக்கான வயதினை நிர்ணயிப்பது எந்த வகையிலும் அல்லாஹ்வின் சட்டங்களுக்கோ, ஷரீஅத்துக்கோ முரணானது அல்ல.

-ஏ.ஆர்.எம். இனாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக