செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அல்லாமா ம.மு. உவைஸின் பணி நாட்கணக்கில் பேசப்பட வேண்டியதே!


36 ஆவது வகவக் கவியரங்கில் “காப்பியக்கோ”

அல்லாமா ம.மு. உவைஸ் அரங்கில் வகவத்தின் 36 வது கவியரங்கு
கடந்த 10-4-2017 அன்று வலம்புரி கவிதா வட்டத்தின் 36வது கவியரங்கம் கொழும்பு அல்லா ஹிக்மா கல்லூரியில் அல்லாமா ம .மு.உவைஸ் அரங்கில் இடம்பெற்றது. வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.


காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் பிரதம அதிதியாக கலந்து அல்லாமா ம.மு. உவைஸ் குறித்து சிறப்புரையாற்றினார்.

காலஞ்சென்ற மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் மற்றும் தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். அருளானந்தம் ஆகியோர் நினைவு கூரப்பட்டனர். அவர்கள் பற்றிய சிறு குறிப்புகளை மேமன்கவி வழங்கினார்.

வரவேற்புரையை செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் மேற்கொள்ள நன்றியுரையை செயற்குழு உறுப்பினர் ஈழகணேஷ் வழங்கினார்.

ஜனாதிபதி விருதுகளான தேசபந்து விருது பெற்ற திருவாளர் தெ. ஈஸ்வரன் அவர்கள், வித்யாகீர்த்தி விருது பெற்ற பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள், கலாகீர்த்தி விருது பெற்ற திருவாளர் உடுவை தில்லை நடராஜா அவர்கள் ஆகியோருக்கும், அரச நாடக விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதான நாடகக் கீர்த்தி விருது பெற்ற திருவாளர் தமிழ்மணி மானா மக்கீன் அவர்களுக்கும் வகவம் தனது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தது.
அல்லாமா ம.மு.உவைஸ் பற்றி சிறப்புரையாற்றிய சிறப்பதிதி காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள்,

'இரண்டாயிரம் இஸ்லாமிய காப்பியங்களை கண்டு பிடித்து தமிழுலகிற்கு அறிமுகப்படுத்திய ம.மு.உவைஸ் அவர்களது சேவை குறித்து நாட்கணக்காக பேசலாம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராக நியமிக்கப்பட்ட ஒரே ஒரு இலங்கையர் அல்லாமா உவைஸ் அவர்கள் மாத்திரமே. அவர் தமிழுலகுக்கு ஆற்றியுள்ள பணி அளப்பரியது.

சுவாமி விபுலானந்தர் அவர்களின் தூண்டுகோல் காரணமாகவே உவைஸ் அவர்கள் இஸ்லாமிய இலக்கியங்களை ஆராய முற்பட்டார்கள். எனவே இஸ்லாமிய இலக்கியவாதிகள் சுவாமி விபுலானந்தர் அவர்களையும், ம.மு. உவைஸ் அவர்களையும் என்றும் மறக்க முடியாது. உவைஸ் அவர்களது இலக்கிய பணியுடன் ஒப்பிட்டால் எங்களது பணி தூசுக்கு சமமானது. நாங்கள் அவரது அடியொற்றியே இலக்கியம் படைக்கிறோம். இலக்கிய மாநாடுகள் இலங்கையில் நடாத்தி வருகிறோம். ம.மு.உவைஸ் அவர்களோடு எனக்கிருந்த தொடர்பு நீண்டது. தமிழ் நாட்டில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு நான் சென்றபோது புகழ் பூத்த இந்திய பேராசிரியர்களிடம் தானே அழைத்துப் போய் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீனின் மகன் என அறிமுகப்படுத்திய பெருந்தகை .
ஆறு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடந்த போது அவர் அவற்றில் அவர் மிகவும் உற்சாகமாக ஈடுபட்டுழைத்தார். ஏழாவது மாநாடு நடந்த போது அவர் உயிருடன் இருக்கவில்லை.

அவர் தொடர்ந்த பணியை தொடரும்படி எங்களிடம் மானசீகமாக விட்டு விட்டுச் சென்றிருக்கிறார். அந்தப் பணியைத்தான் எமது இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் செய்து வருகிறது' என்று கூறினார்.

கவியரங்கம் கவிஞர் எம். பிரேம்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கவிஞர்கள் ப.க. மகாதேவா, எம்.ஏ.எம். ஆறுமுகம், மட்டக்களப்பு லோகநாதன், சுபாஷினி பிரணவன், எம். எஸ். தாஜ்மஹான், ரஷீத் எம் இம்தியாஸ், வெலிமடை ஜஹாங்கீர், பாணந்துறை நிஸ்வான், தனபாலன், கலையழகி வரதராணி, தேஜஸ்வினி பிரணவன், கலேவல ஷப்னா, பாயிஸா ஹமீத், கம்மல்துறை இக்பால், கவிக்கமல் ரஸீம், மாத்தளை கமால், உணர்ச்சிப் பூக்கள் ஆதில், மிஹிந்தலை பாரிஸ், கிண்ணியா அமீர் அலி, இளநெஞ்சன் முர்ஷிதீன், வெலிகம கலைமகன் பைரூஸ், ஆகியோர் கவிதை பாடினர்.

சத்திய எழுத்தாளர் நாகூர் கனி, த. மணி, அலி அக்பர், எம். எஸ்.எம். ஜின்னா, 'ஒளி அரசி' ஆசிரியர் ஆர். ஜனதன், இப்னு அஸூமத், ஏ.எம்.அஸ்கர், மலாய்கவி டிவாங்கோ, வெலிப்பனை அத்தாஸ், கவிநேசன் நவாஸ், எம். வஸீர், எம். எச். எம்.நவ்ஸர், ஏ.எஸ். எம். நவாஸ், நவாஸ்தீன், மெஹர்பான் பிலால்ஈ ஜொயெல் ஜோன்சன்,இரா தில்லை ராஜன், ஜே.எம் முஸம்மில், போன்றவர்கள் நிகழ்வினை அலங்கரித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக