செவ்வாய், 7 மார்ச், 2017

தலைமைத்துவ கட்டுப்பாட்டினை மீறிய ஹசனலி. - சாய்ந்தமருது முகம்மது இக்பால்

மகன் கட்சியை அழிக்க முற்படுகையில் வாப்பாவுக்கு செயலாளர் பதவியினை வழங்க முடியுமா? 

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுபோல, இன்று ஹசனலி மீது பலருக்கு பாசம் பொங்கி வழிவதனை காணக்கூடியதாக உள்ளது. பதவிகள் வழங்கபடுகின்றபோது சிறந்த தலைவராக காட்சியளிக்கின்ற ரவுப் ஹக்கீம் அவர்கள், பதவி கிடைக்காதபோது அவர் தலைமைத்துவத்துக்கு தகுதி இல்லாதவராகவும், அவரை திருத்த முற்படுகின்றோம் என்று மக்கள் முன்பு தங்களை நல்லவராக காட்டிக் கொள்பவர்களையும் காணக்கூ டியதாக உள்ளது.

ஹசனலி ஒருபோதும் மு.கா விட்டு விலக்கப்படவில்லை. கட்சி உறுப்பினராகவே இருக்கின்றார். ஆனால் ஹசனலிக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளதாகவும் பொய்களை கூறி தங்களது துரோக செயல்களை மூடிமறைக்க முற்படுகின்ற கூட்டத்தினையும் காண்கிறோம். 
  
அன்று பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் மக்காவில் இருந்துகொண்டு தொலைபேசி மூலமாக முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு தனது செயலாளர் பதவியினை இராஜினாமா செய்யுமாறு கட்டளையிட்டார்.

தலைவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு ஏன், எதற்கு என்ற எந்தவித கேள்விகளும் கேளாது உடனடியாக தனது செயலாளர் நாயகம் பதவியினை ரவுப் ஹக்கீம் அவர்கள் இராஜினாமா செய்தார். அதன் மூலம் தலைமைத்துவ கட்டுப்பாட்டினையும், விசுவாசத்தினையும் நிரூபித்து காட்டினார்.

ஆனால் இன்றைய தலைவர் ஹக்கீம் மட்டுமல்லாது அனைத்து அதியுயர்பீட உறுப்பினர்களும் ஒன்றிணைந்து எட்டாவது நிலையில் உள்ள செயலாளர் பதவியிலிருந்த ஹசனலிக்கு கட்சியின் இரண்டாவது நிலையில் உள்ள தவிசாளர் பதவிக்கு ஏகமனதாக பிரேரித்திருந்தும், எனக்கு தவிசாளர் பதவி வேண்டாம் அதிகாரமுள்ள செயலாளர் பதவிதான் வேண்டும் என்று தலைவருடன் முறண்பட்டார்.  

ஹசனலி அவர்கள் கட்சியை இக்கட்டான நிலைமைக்கு கொண்டுவரும் நோக்கில் தனது செயலாளர் பதவியை பறித்துக்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டிருந்தார். பின்பு தேர்தல்கள் ஆணையாளர் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டுக்கு பின்பு தனது முறைப்பாட்டினை வாபஸ் வாங்கினார்.
தனக்கு அதிகாரம் உள்ள செயலாளர் பதவியுடன் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் வழங்கப்பட வேண்டும் என்று தலைவருக்கு விடுத்த நிபந்தனையின் பின்புதான் ஹசனலி அவர்கள் தலைவருடன் இணக்கப்பாட்டுக்கு வந்ததாக அறியக்கிடைத்தது.

தலைவருடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டினை அடுத்து ஹசனலிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட இருக்கின்றது என்ற செய்தி பரவ ஆரம்பித்ததன் பின்பு அட்டாளைச்சேனையின் அரசியல் நிலவரம் தலைகீழானது.
அதாவது அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனையில் உள்ள முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவரினால் வாக்குறுதி வழங்கப்பட்டதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அது தவறும் பட்சத்தில் தங்களது ஊரிலுள்ள அனைத்து முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு மாற்று நடவடிக்கையினை மேற்கொள்ள போவதாக அறிவித்திருந்தார்கள்.

அதாவது எம்பி பதவியை ஹசனலிக்கு வழங்கினால் அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரசிக்காக யாரும் களம் இறங்க முடியாது என்று பள்ளிவாசலுக்கு கட்டுப்பட்டு ஊரே ஒன்று திரண்டு தலைவருக்கு அழுத்தம் வழங்கப்பட்டது.  
ஆனால் ஹசனலிக்காக நிந்தவூர் மக்களோ, பள்ளிவாசல்கள் சம்மேளனமோ இப்படி ஒரு அழுத்தத்தினை வழங்கவில்லை. இந்த நிலையில் தலைமைத்துவம் என்ன முடிவு எடுக்கும்? ஒரு தனி மனிதனை திருப்தி படுத்துவதா? அல்லது ஒரு ஊரை திருப்தி படுத்துவதா ? என்ற நிலையில் ஹசனலிக்கு வழங்கப்படுவதாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை.      

இது ஒருபுறம் இருக்க, ஹசனலி அவர்கள் தலைவருடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கயில், முஸ்லிம் காங்கிரசின் அதிஉச்ச அதிகாரங்களை அனுபவித்து பழக்கப்பட்ட ஹசனலியின் புதல்வர், மு. கா தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்றும், அது கிழக்குக்கு வர வேண்டும் என்றெல்லாம் கோஷமிட்டுக்கொண்டு கிழக்கின் எழுட்சி என்ற போர்வையில் முஸ்லிம் காங்கிரசின் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு முகநூல் போராட்டத்தினை நடாத்திக்கொண்டு வருகின்றார்.

இப்படியான சூழ்நிலையில், மகன் முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவரையும் அழிக்க வேண்டுமென்று போர் முரசு கொட்டும்போது, வாப்பாவுக்கு அக்கட்சியின் ஆவணங்களுடன் தொடர்புள்ள செயலாளர் பதவியினை எவ்வாறு வழங்க முடியும்?  
எனவேதான் செயலாளர் பதவி வழங்காது விட்டாலும், தேசிய தலைவருக்கு அடுத்தபடியாக உள்ள தவிசாளர் பதவியினை வழங்கி தலைவர் ஹக்கீம் அவர்கள் ஹசனலியை கௌவித்துள்ளார். ஆனால் தனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாத காரணத்தினால் தவிசாளர் பதவியினை ஏற்க மறுத்துள்ளார். இப்போதும் ஹசனலிக்காக அது வெற்றிடமாக உள்ளது.


இந்த உண்மையை வெளியே கூறினால் மக்களிடம் அது எடுபடாது என்ற காரணத்தினால் வழக்கமாக எல்லோரும் கூறுவதுபோன்று தலைவர் பிழை செய்துள்ளார் என்று தன்னை உண்மையாளனாக மக்களுக்கு காண்பிக்க எடுக்கின்ற அரசியல் திருகுதாளங்களை ஆரம்பித்துள்ளார். முஸ்லிம் காங்கிரசை அழிக்கவேண்டும் என்று எந்நேரமும் கழுகுப்பார்வை வைத்திருக்கின்ற சில சமூகத்துரோகிகள் இந்த பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஊதி பெருப்பிக்க முற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.      

-சாய்ந்தமருது  முகம்மத் இக்பால் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக