வெள்ளி, 10 மார்ச், 2017

சிறுபான்மையினரின் வாழ்விடங்கள் இலக்குவைக்கப்படுகின்றன! கல்முனை M.H.M. பிர்தௌஸ்

நல்லாட்சியின் ஒரு பகுதிக்கு, பௌத்த சிங்கள உணர்வூட்டலை அரசியல் ஆயுதமாகக் கையில் எடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது. கடந்த அரசின் காலத்தில் இருந்ததைப் போல் – மதம் சார்ந்ததாக இவ்வுணர்வூட்டல் அமையக்கூடாது என்றும், மாறாக வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களின் நில, மத, இன அடிப்படையிலான உரித்துகள் தொடர்பானதாக இது இருக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்-பட்டுள்ளதாக ஆய்ந்தறியலாம். சிறுபான்மையினரின்
ஒட்டுமொத்த ஆதரவையும் மஹிந்த இழந்ததைப்போல் இழக்கவும் கூடாது, மஹிந்தவிடம் கட்டுண்டு கிடக்கும் சிங்கள தீவிரவாத உணர்வாளர்களை வென்றெடுக்கவும் வேண்டும் என்பதுதான் நல்லாட்சியின் விருப்பமாகும்.

மாகாணங்களுக்கு தற்போது இருக்கும் குறைந்த பட்ச அதிகாரம்கூட வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகளான சிங்கள ஆளுநர்களுக்கே இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக் கூடாது என்பதன் சூட்சுமத்தின் பின்னணி இதுதான்.

கடந்த 28 வருடங்களில் ஒரு வாரத்துக்காவது தமிழர் ஒருவரோ அல்லது ஒரு முஸ்லிமோ வடக்கு கிழக்கில் ஆளுநராக நியமிக்கப்படவில்லை. இந்த நடைமுறை சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த தந்திரமாகும்.

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான் அண்மையில் ஞானசாரர் மாகாண ஆளுநர்களின் அதிகாரம் குறைக்கப்படக் கூடாது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் எந்தக் கொம்பனாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரமுள்ள பிராந்திய ஜனாதிபதியாக செயல்படும் ஆளுநர்களிடமே மாகாண நிர்வாகம் உள்ளது.

குளங்களைக் கட்டி வளப்படுத்தி விவசாயத்தை நவீனமாக்குவதன் மூலம், இப்பகுதிகளில் வாழ்ந்து வந்த சிறுபான்மையினரின் வாழ்வை மேம்படுத்துவது போல் பாசாங்கு செய்து அரச அனுசரணையுடன் சிங்களக் குடியேற்றத்துக்கு வழிகோலினர். அம்பாறையிலும், திருமலையிலும் நீர்ப்பாய்ச்சல் உள்ள இடங்கள் கேந்திர முக்கியத்துவமுடைய பகுதிகளாயின.


குளங்களின் பாய்ச்சல் கதவுகளை அண்டியும், சுற்றியும் பரந்து¬பட்ட பெரும் நிலப்பரப்பில் – தெற்கில் இருந்து ஏற்றிவரப்பட்ட சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.

வளமான நிலப்பரப்பில் பெரும் பகுதியும், பாய்ச்சல் வசதியுள்ள குளங்களின் நீரை திறக்கவும், பூட்டவுமான கட்டுப்பாடும் இவர்கள் வசமாயின. இதனால் சிறுபான்மையினரின் தொழிலிடங்கள் துவம்சம் செய்யப்பட்டன.

பின்னர் அக்கம் பக்கத்திலுள்ள சிங்கள கிராமங்களை அம்பாறை மாவட்டத்துடன் நிர்வாக ரீதியாக இணைத்து விட்டனர். இவ்வாறுதான் அம்பாறையில் முஸ்லிம்களின் பெரும்பான்மையும், திருகோணமலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உறுதியான இருப்பும் சிதைக்கப்பட்டன.

“அந்தந்த மாகாணங்களில் வாழும் மக்களினால், மாகாண ஆளுநர்கள் தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும்” என்று, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கமானது, அரசியலமைப்பை மாற்றுவதற்கு முன்னர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரட்டும் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக